"இந்த இந்திய அணி உலகக் கோப்பை வெல்லும்"- அணி தேர்வு குறித்து ஆதரவாக ’கவாஸ்கர்’ பேச்சு

"இந்த இந்திய அணி உலகக் கோப்பை வெல்லும்"- அணி தேர்வு குறித்து ஆதரவாக ’கவாஸ்கர்’ பேச்சு
"இந்த இந்திய அணி உலகக் கோப்பை வெல்லும்"- அணி தேர்வு குறித்து ஆதரவாக ’கவாஸ்கர்’ பேச்சு
Published on

இந்தியாவின் இந்த அணி வருகின்ற டி20 உலககோப்பையை வெல்லும் என நம்பிக்கை இருப்பதாக முன்னாள் இந்திய ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

நடக்கவிருக்கும் டி20 உலககோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே அணித்தேர்வு குறித்து பல்வேறு கேள்விகளையும் அதிருப்திகளையும் முன்னாள் இந்திய வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நடந்து முடிந்த ஆசியகோப்பையில் பங்கேற்ற அணியே பெரிய மாற்றம் இல்லாமல் அறிவிக்கப்பட்டிருப்பதால், அணியின் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும், ஆசிய கோப்பையில் முக்கியமான அழுத்த சூழ்நிலை நேரத்தில் இளம் பந்துவிச்சாளர்கள் சரிவர செயல்படாததால் முகமது ஷமியை அணிக்குள் எடுத்திருக்க வேண்டும் என்ற வாதம் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

மேலும் அணியில் 140 கிமீ வேகத்தில் பந்துவீசும் பந்துவீச்சாளர் பும்ராவை தவிர வேறு யாரும் இல்லாததால் அதிவேகம் மற்றும் துல்லியமான ஏர்க்கர் பந்துகளை வீசும் ஷமியை ஆஸ்திரேலியா டி20 தொடருக்கு பின் டி20 அணியில் 15 வீரர்களில் ஒருவராக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அறிவித்திருக்கும் அணியே போதுமானது என்று அணி அறிவிப்பிற்கு ஆதரவாக பேசியுள்ளார் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். அவர் பேசியிருப்பது, “ ஒருமுறை அணி அறிவிக்கப்பட்ட பிறகு அதில் கேள்வி எழுப்புவதும், குறை சொல்வதும் அவசியமற்ற ஒன்று. என்ன இருந்தாலும் அது நம் இந்திய அணி, நாம் அதற்கு ஆதரவாக இருக்க வேண்டும். ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அணி மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எல்லா அணிக்கும் இருக்கும் சிறு அதிர்ஷ்டம் மட்டும் இருந்தால் போதும் இந்த இந்திய அணி நிச்சயம் கோப்பையை வென்று வரும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் தலைமை தேர்வாளர் திலீப் வெங்சர்க்கார் அணி தேர்வு குறித்து கூறுகையில், நான் அணி தேர்வராக இருந்திருந்தால் டி20 உலகக் கோப்பைக்கு முகமது ஷமி, உம்ரான் மாலிக் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோரை தேர்வு செய்திருப்பேன். அவர்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த ஐபிஎல் சீசன் இருந்ததால், டி20 போட்டிகளில் அவர்களுக்கு நீண்ட வாய்ப்பை கொடுத்திருப்பேன்" என்று தெரிவித்தார்.

முன்னாள் இந்திய கேப்டனும், தற்போதைய ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவருமான முகமது அசாருதீன் பேசுகையில், “பிரதான அணியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது ஷமி நீக்கப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது. தீபக் ஹூடாவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹர்ஷல் படேலுக்குப் பதிலாக முகமது ஷமி இருவரையும் தேர்வு செய்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com