ஒருவேளை தோனிக்கு காயம் அல்லது வேறு காரணங்களால் விளையாட முடியாத நிலை ஏற்படும் போது, தினேஷ் அந்த இடத்திற்கு பொருத்தமானவர் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள லண்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக அனைத்து நாடுகளும் தங்கள் அணிகளை அறிவித்துவிட்டன. இந்தியாவில் கீப்பர் தோனிக்கு மாற்று கீப்பராக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இளம் வீரர் ரிஷாப் பண்ட்க்கு பதிலாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டது ஏன் ? என்ற கேள்விகள் எழுந்தன. ரிஷாப் சிறப்பாக தானே விளையாடி வருகிறார் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக் தேர்வு தொடர்பாக பேட்டியளித்துள்ள இந்திய அணியின் கேப்டன் கோலி, “தினேஷ் அனுபவம் மிக்கவர். ஒருவேளை கடவுள் வேண்டாமென்று நினைத்து தோனிக்கு காயம் அல்லது வேறு காரணத்தால் விளையாட முடியாமல் போனால், அவருக்கு தினேஷ் அந்த இடத்திற்கு பொருத்தமாக இருப்பார். விக்கெட்டுகள் சரியும் நேரத்தில் தினேஷ் கார்த்திக்கால் பின்புலமாக இருந்து விளையாட முடியும். ஒரு இறுதி ஆட்டக்காரராக ஆட்டத்தை முடிக்கும் சிறந்த திறமை உடையவர் அவர். பல முக்கிய தொடர்களில் அவரது திறமையின் வெளிப்பாடு உலகக் கோப்பை அணியில் அவர் தேர்வானதுக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளார்.