ரஷித் கானின் பவுலிங்கால் கலங்கியிருந்த ஹஸ்ஸி : மிரளவைத்த தோனி..!

ரஷித் கானின் பவுலிங்கால் கலங்கியிருந்த ஹஸ்ஸி : மிரளவைத்த தோனி..!
ரஷித் கானின் பவுலிங்கால் கலங்கியிருந்த ஹஸ்ஸி : மிரளவைத்த தோனி..!
Published on

தோனியின் பேட்டிங் திறமையைக் கண்டு வியந்துபோன அனுபவங்களை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி பகிர்ந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறந்த பேட்ஸ்மேனாக விளையாடி, தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருப்பவர் மைக்கேல் ஹஸ்ஸி. இவர் தோனியுடனான தனது அனுபவங்கள் குறித்து அண்மைக்காலமாகக் கூறி வருகிறார். அத்துடன் தோனி தன்னைவிடச் சிறந்த கணிப்பாளர் என்றும், அவரிடம் இருக்கும் திறமை தன்னிடம் இல்லை என்றும் சில நாட்களுக்கு முன்னர் புகழ்ந்திருந்தார்.

இந்நிலையில் தோனி ஒருமுறை விளையாடியதைக் கண்டு மிரண்டு போன நிகழ்வைப் பகிர்ந்துள்ளார். 2018ஆம் ஆண்டு ஐபிஎல் அரையிறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியபோது, ரஷித் கான் பந்துவீச்சால் கலங்கியிருந்ததாகவும், அவரது பந்துவீச்சில் இருக்கும் புதிய சுழல் முறை பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதையும் அறிந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அணிக்கு சொல்லலாமா ? வேண்டாமா ? எனக் குழம்பி இருந்ததாகவும், இறுதியில் பேட்டிங் பயிற்சியாளர் என்ற முறையில் குறிப்பு புத்தகத்தில் எழுதி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். அதைப்படித்துவிட்டு தென்னாப்பிரிக்க வீரர் டு பிளசிஸ் பயனுள்ள தகவல் என்றதாகக் கூறியுள்ளார்.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கில் தடுமாறியதாகவும் 2வது பேட்டிங்கில் 140 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்ததாகவும், அப்போது தோனி களமிறங்கியதாகவும் தெரிவித்துள்ளார். அந்த சமயம் ரஷித் கான் தனது சுழற்பந்துவீச்சை வெளிப்படுத்த, அதை தோனி ஒரே அடியாக பவுண்டரிக்கு விரட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார். தோனியின் அந்தத் திறமையைக் கண்டு வியந்ததாகவும் கூறியுள்ளார். அப்போது தோனி நேராகத் தன்னைப் பார்த்து, ‘நான் எனது ஸ்டைலிலேயே விளையாடுகிறேன், நன்றி’ எனக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் தோனியும் அந்தக் குறிப்பைப் படித்திருக்கிறார், இருப்பினும் தனது பேட்டிங் திறமையில் நம்பிக்கையுடன் இருந்து ரஷித் கான் பந்தைச் சிதறடித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com