”லயன் விக்கெட் எடுக்கும்போதெல்லாம் பண்ட்-ஐ மிஸ் செய்கிறோம்”-ரசிகர்களின் வைரல் ட்வீட்

”லயன் விக்கெட் எடுக்கும்போதெல்லாம் பண்ட்-ஐ மிஸ் செய்கிறோம்”-ரசிகர்களின் வைரல் ட்வீட்
”லயன் விக்கெட் எடுக்கும்போதெல்லாம் பண்ட்-ஐ மிஸ் செய்கிறோம்”-ரசிகர்களின் வைரல் ட்வீட்
Published on

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை விரைவாகவே கைப்பற்றி, இந்திய அணியை நிலைகுலையச் செய்துள்ளார் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல், இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களம் கண்டுள்ளது ஆஸ்திரேலியா.

ஒரே ஓவரில் லபுசனே, ஸ்மித்தை வெளியேற்றிய அஸ்வின்!

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா, நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். 50 ரன்னிற்கு முதல் விக்கெட்டை இழந்தாலும் கவாஜாவின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா நல்ல நிலைமையில் தான் இருந்தது. ஆனால் 23ஆவது வீச வந்த அஸ்வின் லபுசனேவை எல்பிடபள்யூ மூலம் அவுட்டாக்கி வெளியேற்றினார்.

தொடர்ந்து களத்திற்கு வந்த ஸ்டீவ் ஸ்மித்தையும் டக் அவுட்டாக்கி வெளியேற்றி ஆஸ்திரேலியாவை நிலைகுலையச்செய்தார் ரவி அஸ்வின். பின்னர் ஆஸ்திரேலியாவை காப்பாற்ற போராடிய கவாஜா மற்றும் ஹேண்ட்ஸ்கோம் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து, ஆஸ்திரேலியாவை 263 ரன்களுக்கு எடுத்துச்சென்றனர். இந்தியாவின் தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய நாதன் லயன்!

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் இருவரும், முதல் நாள் முடிவில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் 2ஆவது நாளையும் இந்தியாவை அப்படியே விளையாட நாதன் லயன் அனுமதிக்கவில்லை. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நாதன், கே எல் ராகுலை 17 ரன்களில் வெளியேற்றினார். பின்னர் அடுத்த ஓவரில் கேப்டன் ரோகித் சர்மாவை போல்டாக்கி வெளியேற்றிய லயன், அதே ஓவரில் புஜாராவையும் டக் அவுட்டாக்கி வெளியேற்றி இந்தியாவிற்கு அடிக்குமேல் அடி கொடுத்தார்.

54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற, கைக்கோர்த்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி இந்தியாவை நல்ல டோட்டலுக்கு எடுத்து செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்னும் நீ போகலையா என்பது போல், மீண்டும் பந்துவீச வந்த நாதன் லயன் ஸ்ரேயாஸ் ஐயரை வெளியேற்றினார். 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா. ஜடேஜா பவுண்டரிகளாக அடித்து ரன்களை உயர்த்த ஸ்பீட் பிரேக்கர் போல வந்த டோட் முர்பி ஜடேஜாவை லெக் பை விக்கெட் மூலம் வெளியேற்றினார்.

போட்டியின் அழுத்தம் விராட் கோலியின் மேல் அதிகமான நிலையில், அற்புதமான டெலிவரியை வீசிய குனேமன் கோலியை வெளியேற்றி அசத்தினார். 4 பவுண்டரிகளுடன் 44 ரன்களில் களத்திலிருந்த விராட் கோலி வெளியேற. தொடர்ந்து சிறப்பான கேப்டன்சிய வெளிப்படுத்தினார் பேட் கமின்ஸ். மீண்டும் நாதன் லயனை பந்துவீச அழைக்க, களத்திற்கு வந்த அவர் விக்கெட் கீப்பர் பரத்தை வெளியேற்ற, இந்திய அணி 139 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அக்சர் பட்டேல் மற்றும் ரவி அஸ்வின் இருவரும் களத்தில் நீடிக்கின்றனர்.

5 விக்கெட்டுகளை லயன் எடுத்த நிலையில் இணையத்தில் டிரெண்டாகும் ரிஷப் பண்ட் பெயர்!

நாதன் லயன் இந்தியாவிற்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், அவருக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட ரிஷப் பண்டின் பெயரை, இந்திய ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். பொதுவாக ஆஃப் ஸ்பின்னர்கள் இடது கை பேட்டர்களுக்கு சவாலாக இருப்பார்கள் என்ற பழமொழி இருந்துவருகிறது. ஆனால் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் நாதன் லயனிற்கு எதிராக 95 ஸ்டிரைக் ரேட்டுடன் இருக்கிறார். நாதன் லயனை சந்திக்கும் 4 பந்துகளில் ஒரு பவுண்டரியை விரட்டும் வீரராக, ஆதிக்கம் செலுத்தி உள்ளார் ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்ட் விபத்தின் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் பங்கேற்க முடியாத நிலையில், ரிஷப் பண்ட் கடந்த ஆண்டுகளில் நாதன் லயனிற்கு எதிரான விளையாடிய வீடியோ கிளிப்களை பகிர்ந்து ரிஷப் பண்டை மிஸ் செய்து வருவதாக, இந்திய ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு ரசிகர், “ ஒவ்வொரு முறையும் நாதன் லயன் விக்கெட் வீழ்த்தும் போது, நான் ரிஷப் பண்ட்டை மிஸ் செய்கிறேன்” என பதிவிட்டு, ”நாதன் லயன் வீசிய ஒரு பந்து அதிகளவு ஸ்விங் ஆகி கீப்பரை தாண்டி ஸ்லிப் பீல்டருக்கு செல்லும் நிலையில், அடுத்த பந்தை ரிஷப் இறங்கி வந்து சிக்சருக்கு அனுப்பும்” வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மற்றொரு ரசிகர், “ ஆஃப் ஸ்பின்னரான லயனுக்கு எதிராக லெக் சைடில் இறங்கி வந்து கவரில் தூக்கி சிக்சர் அடிக்கும் வீடியோவை பகிர்ந்து”,” பார்க் முழுவதும் லயனை அடிக்கக்கூடிய பண்டை மிஸ் செய்கிறேன்” என ஹார்ட் உடைந்திருக்கும் ஸ்டிக்கரோடு பதிவிட்டுள்ளார்.

பல ரசிகர்கள், “ ரிஷப் இந்திய வீரர்கள் அவுட்டாவதை பார்க்கும் போது” பதிவிட்டு, பண்ட் உணர்ச்சிவசப்படுவது போலான நகைச்சுவை பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com