’’ஒவ்வொரு முடிவும் புதிய ஆரம்பமே’’ என்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தனது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக்கிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் சானியா மிர்ஸா.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர், இந்த உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்திருந்தார். நடப்பு உலக கோப்பை தொடரில் 3 போட்டிகளில் ஆடிய மாலிக் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பாகிஸ்தான் அணி, கடைசியாக பங்களாதேஷ் அணியுடன் நேற்று மோதியது. இந்த போட்டியிலும் மாலிக் ஓரங்கட்டப்பட்டார். அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டதால், பாகிஸ்தான் அணியின் உலகக் கோப்பை பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
ஓய்வு பெற்ற 37 சோயிப் மாலிக்கை, சக வீரர்கள் நேற்றைய போட்டி முடிவுக்குப் பின் தோளில் சுமந்தபடி சென்று வாழ்த்துக்க ளைத் தெரிவித்தனர். இதுவரை 287 ஓரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள மாலிக், 7ஆயிரத்து 534 ரன்கள் குவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 158 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் சோயிப் மாலிக்கின் சாதனைகளை பாகிஸ் தான் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே, மாலிக்கின் மனைவி சானியா மிர்ஸா, அவருக்கு டச்சிங்கான மெசேஜ் பகிர்ந்துள்ளார்.
’’ஒவ்வொரு கதைக்கும் முடிவு உண்டு, ஆனால், வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கம்தான். 20 வருடங்களாக உங்கள் நாட்டுக்காக பெருமையுடன் ஆடியுள்ளீர்கள். நானும் மகன் இன்ஷானும் நீங்கள் யார் என்பது பற்றியும், நீங்கள் சாதித் திருப்பது குறித்தும் பெருமை அடைகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.