தோனியைப் போல் இருக்க முயற்சிக்க வேண்டாம் என்று ரிஷப் பண்ட்க்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். தோனிக்கு அடுத்தபடியாக ரிஷப் பண்ட்டினை அடுத்த விக்கெட் கீப்பராக உருவாக்கும் முயற்சியை இந்திய அணி மேற்கொண்டு வருகிறது. அதற்காக டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக ரிஷப்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரிஷப் பண்ட்டிற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் கீப்பருமான கில்கிறிஸ்ட் அறிவுரை வழங்கியுள்ளார். அதில், “இந்திய ரசிகர்கள் தோனியை வேறு யாருடனும் ஒப்பீடு செய்யக் கூடாது. அவர் மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளார். ஒரு நாள் யாரேனும் ஒருவர் அந்த உச்சத்தை எட்டக்கூடும். ஆனால், அவ்வளவு எளிதில் அது நடக்க வாய்ப்பில்லை. ரிஷப் பண்ட் திறமை வாய்ந்த இளம் வீரராக உள்ளார். தொடக்கத்திலே அவர் மீது அதிக அழுத்தத்தை கொடுக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் தோனியைப் போல் விளையாடுவார் என எதிர்பார்க்கக் கூடாது.
தோனியின் கீப்பிங் ஸ்டையிலை காப்பி அடிக்க வேண்டாம். அவரைப் போல் இருக்க நினைக்க வேண்டாம். தோனியைப் போல் இருப்பதை காட்டிலும், உங்களைப் போல் நீங்கள் இருங்கள். தோனியிடம் இருந்து என்னவெல்லாம் முடியுமோ அதனையெல்லாம் கற்றுக் கொள்ளுங்கள். உங்களால் கொடுக்க முடிந்ததை கொடுங்கள்” என்று கூறியுள்ளார்.