இந்தியாவிற்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வி அடைந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் மற்றும் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. உலக நாடுகளின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் அபராமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியிருந்த ஆஸ்திரேலிய அணி, சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் ரன்களை சேர்க்க தடுமாறி வருகிறது.
இந்தியா வரும் வரை 1 போட்டியில் மட்டும் தான் தோல்வி!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வரை, விளையாடியிருந்த 15 போட்டிகளில் 1 போட்டியில் மட்டும் தான் தோல்வியை சந்தித்திருந்தது ஆஸ்திரேலியா. ஆனால், இந்தியாவிற்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டியிலும் அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்துள்ளது. தோல்வியாக இருந்தாலும் போராடி தோற்கும் அளவிற்கான தோல்வியாக இல்லாமல், 2 போட்டிகளும் 3ஆவது நாளை கூட கடக்காமல் முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியாவின் அனுபவமுள்ள சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரது பந்துவீச்சையும் எதிர்கொள்ள முடியாத ஆஸ்திரேலிய அணி வீரர்கள், தொடர்ந்து களத்தில் நிற்கவே தடுமாறி வருகின்றனர். அதிலும் உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீரர்கள், 3 பந்துகளில் அவுட்டாகி வெளியேறியது பலரது விமர்சனங்களுக்கு உள்ளாகியது. தொடர் தொடங்குவதற்கு முன்னதாக 2004ஆம் ஆண்டிற்கு பிறகு ஆஸ்திரேலியா இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறிய முன்னாள் வீரர்கள், இந்தியா 4-0 என தொடரை வெல்வதற்கு வாய்ப்பிருப்பதாக தற்போது தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா இவ்வளவு மோசமாக தோல்வியடைந்து இருக்கக்கூடாது -இயான் சேப்பல்
ஆஸ்திரேலியாவின் தோல்வி குறித்து பேசியிருந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் சேப்பல், “தோல்வியடைந்து இருந்தாலும் இவ்வளவு மோசமாக தோல்வியை சந்தித்து இருக்கக்கூடாது. இரண்டாவது நாள் மாலையில் செய்யவேண்டியதை எல்லாம் சிறப்பாக செய்திருந்தது ஆஸ்திரேலியா. அன்று மாலை அதிரடியான எதிர்ப்பார்ட்டத்தை வெளிப்படுத்தி, கிட்டத்தட்ட இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை ஒரு கலக்கதில் தள்ளியிருந்தனர் என்றே சொல்லலாம். ஆனால் அதற்கு பிறகு மறுநாளில் ஆஸ்திரேலிய செய்தது எல்லாம் வேடிக்கையாக இருந்தது. விக்கெட்டுகளை காப்பாற்ற அவர்கள் முயற்சிகளை செய்யவே இல்லை. மாறாக விக்கெட்டுகளை அவர்களே கிஃப்ட் செய்து கொண்டிருந்தனர். நீங்கள் இந்தியாவில் ஆக்ரோசமாக இருந்தால் மட்டும் போதாது, நிதானமாகவும் செயல்பட வேண்டும். தேவையற்ற ரிவர்ஸ் ஷாட்டுகள் நிறைய ஆடப்பட்டது. இவ்வளவு மோசமாக தோல்வியடைந்திருக்க கூடாது” என்று தெரிவித்திருந்தார்.
வார்னர் ஸ்மித்திற்கு பிறகு சிறந்த வீரர்கள் இல்லை!
ஆஸ்திரேலியாவின் தோல்வி குறித்து பேசியிருக்கும் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், ஆஸ்திரேலியா தோல்வியடைந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார். டிவிட்டர் பக்கதில் பதிவிட்டிருக்கும் அவர், “ ஆஸ்திரேலியாவின் சரிவை காணவே காலையில் எழுந்தேன். இந்தியாவில் டெஸ்ட் போட்டியை வெல்வதென்பது சுலபமான காரியம் இல்லை. மற்ற அணிகளும் இதே நிலையை தான் சந்தித்து இருக்கின்றன, ஆஸ்திரேலியா தோல்வியடைந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என்றால், ஆஸ்திரேலியாவில் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் ஓய்வு பெற்றதற்கு பிறகு, அவர்களின் பெஞ்சில் சிறந்த வீரர்கள் பெரிதாக இல்லை” என்று கூறி ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதை பதிவு செய்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதி இந்தூரில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.