”இங்க பயிற்சி எடுத்துட்டு போய்.. அங்க எப்படி ஜெயிக்க முடியும்” - ஆஸி. அணியை சாடிய கிளார்க்

”இங்க பயிற்சி எடுத்துட்டு போய்.. அங்க எப்படி ஜெயிக்க முடியும்” - ஆஸி. அணியை சாடிய கிளார்க்
”இங்க பயிற்சி எடுத்துட்டு போய்.. அங்க எப்படி ஜெயிக்க முடியும்” - ஆஸி. அணியை சாடிய கிளார்க்
Published on

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் பயிற்சி போட்டியில் விளையாடாதது குறித்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சாடி பேசியுள்ளார்.

இந்தியாவுடனான பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்த நிலையில், ஆஸ்திரேலிய அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 3ஆவது போட்டி நாளை தொடங்குகிறது. கடைசி 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி, சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

இந்த அணியை முந்தைய ஆஸ்திரேலிய அணியோடு ஒப்பிடாதீர்கள்!- கங்குலி

ஆஸ்திரேலிய அணி அடுத்த 2 போட்டிகளில் மீண்டுவரும் என தனக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்திருக்கும் சவுரவ் கங்குலி, “எனக்கு தெரியவில்லை, ஆஸ்திரேலியா 4-0 என ஒயிட்வாஸ் ஆவதை எப்படி தடுத்து நிறுத்த போகிறது என்று எனக்கு தெரியவில்லை. பிரச்சனை என்னவென்றால், நாம் இந்த ஆஸ்திரேலிய அணியை போய் கடந்த கால அணிகளுடன் ஒப்பிடுகிறோம். தற்போதைய ஆஸ்திரேலிய அணி முந்தைய அணியை போல் எல்லாம் இல்லை. முன்னர் உங்களிடம் மேத்யூ ஹெய்டன், ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் மற்றும் மார்க் வா, கில்கிறிஸ்ட் போன்ற பல நட்சத்திர வீரர்கள் இருந்தனர். அவர்களின் எதிர்கொண்டு ஆடும் குணம் தற்போதிருக்கும் அணியிடம் சுத்தமாக இல்லை” என்று விமர்சித்திருந்தார்.

மேலும், " தற்போதைய அணியில் ஸ்டீவ் ஸ்மித் ஒரு சிறந்த வீரர் தான், லபுஷனேவும் ஒரு நல்ல வீரர் தான், ஆனால் இவர்களுக்கு இந்தியாவின் ஆடுகளத்தின் சூழல்களில் விளையாடுவது கடினமானதாக இருக்கிறது. டேவிட் வார்னரும் விளையாட போவதில்லை. எல்லோரும் முந்தைய அணியை போல் நினைத்திருக்கிறோம், அவர்கள் அப்படியெல்லாம் இல்லை. சில ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடும் அவர்களுக்கு, பல ஆடுகளங்களில் சிறப்பாக விளையாட தெரிவதில்லை” என கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பயிற்சி செய்துவிட்டு இந்தியாவில் போய் எப்படி வெற்றி பெறுவீர்கள்! - கிளார்க்

இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி விமர்சனம் செய்துள்ளது குறித்து பேசியிருக்கும் மைக் கிளார்க், “ஆஸ்திரேலிய அணி மீண்டும் கம்பேக் செய்யும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் மீண்டுவந்து சிறப்பாக செயல்படவில்லை என்றால், அது ஒவ்வொரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகருக்கும் பெரும் ஏமாற்றமாக அமையும். அதே நேரத்தில், சவுரவ் கங்குலி ஏன் தொடரின் முடிவை 4-0 என்று கணித்துள்ளார் என்பது எனக்குப் புரிகிறது" என்று கூறியுள்ளார்.

மேலும், “ ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டோவோ, இல்லை வேறு யாரும் என்ன சொல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலியா முன்னதாகவே இந்தியாவுக்குச் சென்றிருக்க வேண்டும். அவர்கள் இந்தியாவை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள், இந்தியாவை எதிர்கொள்ளும் அளவிற்கான எந்த தயார் நிலையிலும் அவர்கள் செல்லவில்லை என்று தெரிகிறது. உங்களால் இந்தியாவுக்குச் செல்ல முடியவில்லை என்றால், நீங்கள் குறைந்த பட்சம் யுனைடட் எமிரேட்ஸிற்காவது சென்று தயாராகியிருக்க வேண்டும்.

மேலும் நீங்கள் ஒரு தொடருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால், அங்குசென்று பயிற்சி போட்டியில் விளையாடவேண்டும். அப்போது தான் ஆடுகளத்தின் தன்மை குறித்து அறிந்துகொள்ள முடியும். அதைவிட்டுவிட்டு அதே ஆடுகளத்தை போலான, ஆஸ்திரேலிய மண்ணில் பயிற்சி செய்துவிட்டு போய், இந்தியாவில் வெற்றிபெறுவேன் என்றால் அது உங்களால் முடியாது” என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com