15வது ஓவருக்கு மேல்தான் இந்திய அணியின் பேட்டிங் சரியில்லை என தோனியை இந்தியக் கேப்டன் விராட் கோலி சாடியுள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழைப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. 15வது ஓவரிலேயே 100 ரன்களை கடந்த இந்திய அணி, அடுத்த 5 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதிவரை விளையாடிய தோனி 37 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, இறுதி பந்துவரை போராடி வெற்றி பெற்றது. குறிப்பாக, 7 விக்கெட்டுகள் சென்ற பின்னர் கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி இருந்தது. ஆனாலும், கடைசி ஓவரை வீசிய உமேஷ் யாதவ் 14 ரன்கள் வாரிக்கொடுத்தார். இது அரங்கத்திலிருந்த ரசிகர்கள் மட்டுமின்றி, தொலைக்காட்சிகள் போட்டியைக் கண்ட ரசிகர்களையும் சங்கடப்பட செய்தது.
போட்டி குறித்து பேசிய விராட் கோலி, “நாங்கள் முதலில் சரியாக பேட்டிங் செய்யவில்லை. 15வது ஓவர் வரை சீரான விக்கெட் இழப்பு இருந்தது. ஆனால், அதற்கு மேல் பேட்டிங்கை சரியாக செய்யவில்லை. குறைந்த அளவு ரன்கள் குவிப்பு என்பது ஸ்கோர் போர்டில் இருக்கும்போது, அதை பார்க்கும் எதிரணிக்கு இலக்கு எளிதாகத் தெரியும். நமது பந்துவீச்சை பொறுத்தவரை மகிழ்ச்சி தான்.
பும்ராவின் பந்துவீச்சு அபாரமாக ஆட்டத்தை மாற்றியது. மயாங்க் மார்கண்டேவும் மிடில் ஓவர்களை நன்றாக வீசினார். உலகக் கோப்பை அணியில் ராகுல் மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோரை சேர்க்க, அவர்களுக்கு இன்னும் சில போட்டிகளில் வாய்ப்பளிக்க வேண்டும். ராகுலை பொறுத்தவரை சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார் என நான் நினைக்கிறேன். 150 ரன்கள் எடுத்திருந்தால், இந்த மைதானத்தில் வெற்றி பெற்றிருப்போம்” என்றார். அவர் உமேஷ் யாதவை பற்றி ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை. எனவே அடுத்தப் போட்டியில் அவர் இடம்பெறுவது சந்தேகம் எனப்படுகிறது.