“சொதப்பல் முதல் சூப்பர் வரை” - விராட் கோலி கூறும் அனுபவங்கள்

“சொதப்பல் முதல் சூப்பர் வரை” - விராட் கோலி கூறும் அனுபவங்கள்
“சொதப்பல் முதல் சூப்பர் வரை” - விராட் கோலி கூறும் அனுபவங்கள்
Published on

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது தொடர்பாக இந்திய விராட் கோலி தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

கோலி கூறும்போது, “இந்த வெற்றியை விட பெருமையான ஒன்று இந்திய அணிக்கு இல்லை. இந்த வெற்றி முறையை கட்டமைக்க எங்களுக்கு 1 வருடமானது. நான் கேப்டனாக மாறிய பிறகு, முதல் முறை நாங்கள் மாற்றம் அடைந்துள்ளோம். இந்த அணிக்கு மரியாதையுடன் சிறப்பாக தலைமை ஏற்றதில் நான் பெருமை அடைகிறேன். அவர்கள் தான் என்னை கேப்டனாக சிறப்படைய செய்துள்ளனர். உலகக்கோப்பை விளையாடும் போது அணியிலேயே நான் தான் சிறியவன். 

கோப்பையை வென்ற போது சீனியர் வீரர்கள் மனம் உருகி மகிழ்ந்தனர். ஆனால் என்னால் அதை உணர முடியவில்லை. ஆனால் யாரும் பெறாத வெற்றியை பெரும்போது, இப்போது அதை நானும் உணர்கிறேன். இங்கு புஜராவிற்கு தனிச்சிறப்பு அளிக்க வேண்டும். அவர் எதைக்கூறினாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டவராக இருப்பதால், அவரை வழிநடத்துவது எளிதாக இருந்தது. அத்துடன் மயாங் அகர்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நமக்கு தெரியும் ஒரு முறை பேட்டிங் சிறப்பாக செய்தால், பவுலிங்கை சொதப்புவோம். பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினால், பேட்டிங் தடுமாறும். ஆனால் கடந்த இரண்டு தொடர்களில் அதை என்னால் காணமுடியவில்லை. இதுபோன்று இந்திய கிரிக்கெட்டில் நடந்து நான் பார்த்ததில்லை. 4 பந்துவீச்சாளர்களைக் கொண்டு இப்படி ஒரு வெற்றி பெற்றதை நான் இந்திய அணியில் பார்த்ததில்லை. அவர்கள் நல்ல உடல் நிலையுடன் இருந்ததால் நீண்ட நேரம் கலைத்துப்போகாமல் விளையாடினார்கள். அவர்கள் உடல்நிலை குறித்து பொருட்படுத்திக்கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் விளையாடிய போது, நம் அணி சரியான பாதையில் செல்கிறது என நினைத்தோம். இங்கிலாந்திற்கு எதிராக விளையாடிய போது அதை உறுதி செய்தோம். 

தற்போது அதன் பலனாக ஆஸ்திரேலியாவில் வெற்றியை பெற்றுவிட்டோம். அதைவிட முக்கியம் நாங்கள் அணியாக ஒற்றுமையுடன் இருந்தோம். வெளியில் ஆயிரம் சொல்வார்கள் அதைக்கேட்காமல் அணியில் ஒற்றுமையில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தியதன் பலன் தான் இந்த வெற்றி. டிம் பெயின் சிறந்த தலைமையை வெளிப்படுத்தினார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள். ரசிகர்களின் உற்சாகம் ஈடு செய்ய முடியாதது. சொந்த மண்ணை விட்டு வெளியே வந்து விளையாடுகிறோம் என்ற எண்ணமே தோன்றாத அளவிற்கு, இந்திய ரசிகர்கள் அனைத்து ஸ்டேடியங்களுக்கும் வந்திருந்தனர்” என மகிழ்ச்சியுடன் கூறினார். 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்திய அணி முதல்முறை ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை எதிர்த்து பெறும் முதல் வெற்றி இதுவாகும். இதனால் இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தொடரின் நாயகனாக புஜாரா தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com