கடைசி நேரத்தில் பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் மீது மொத்த அழுத்தமும் வைக்கப்படுவதாக ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 32வது போட்டி இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே பஞ்சாப்பில் மொஹாலியில் நடைபெறவுள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 7 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு முன்னதாக உள்ளது. பஞ்சாப் அணி 8 போட்டிகளில் 4 போட்டிகள் மட்டுமே வென்று 5வது இடத்தில் உள்ளது. எனவே இரண்டு அணிகளும் இன்று வெற்றி முனைப்பில் உள்ளன. இந்த ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் பேட்டிங்கை விட, பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் அணியே வெற்றிகளை குவித்து வருகிறது. அதன் காரணமாக தான் பலமான பேட்டிங் இருந்தும், பெங்களூர் அணி பரிதாப நிலையில் உள்ளது.
இந்நிலையில் பந்துவீச்சாளர்களின் நிலை குறித்து பேசியுள்ள ராஜஸ்தான் அணி பவுலர் ஸ்ரேயாஸ், “ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்ற பவுலர்களைவிட வேற்றுமையானவர். அவர் உண்மையில் விரைவாகவும், உலகின் வேகமான பந்துவீச்சாளர்களிலும் ஒருவராவார். மற்ற பவுலர்களும் சிறப்பாக தான் பந்துவீசுகின்றனர். ஆனால் இரண்டு போட்டிகளில் மோசமாக பந்துவீசிவிட்டனர். மற்றபடி அவர்கள் நல்ல பவுலர்கள் தான். ஆனால் ஒன்று எந்த ஒரு பவுலரும் பவர் ப்ளே மற்றும் இறுதி ஓவர்களில் பந்துவீசவது என்பது கடினமான ஒன்றாகும். அந்த நேரம் வேகப்பந்துவீச்சாளர்கள் மீது மொத்த அழுத்தமும் வைக்கப்படுகிறது. அதனால் அவர்கள் பந்துவீசுவதே இக்காட்டான ஒன்றாகிறது. அந்த ஓவர்களில் 8 அல்லது 9 ரன்கள் கொடுத்தால் கூட அது ஏற்கக்கூடியது தான்” என தெரிவித்துள்ளார்.