இந்திய அணிக்குள் மீண்டும் தோனியை எந்த அடிப்படையில் தேர்வு செய்ய முடியும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் வினவியுள்ளார்.
கொரோனா வைரஸால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போயுள்ளன. அத்துடன், ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் நடக்குமா ? என்பதே சந்தேகம் தான் என்ற நிலை உருவாகியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனென்றால் ஐபிஎல் போட்டிகளில் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவர் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் போட்டிகளே நடக்கவில்லை என்றால், பின்னர் எப்படி தோனி டி20 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த கேள்வியை தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் எழுப்பியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் பகிர்ந்த கருத்துகளில், “இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை என்றால், தோனி மீண்டும் அணிக்குள் வருவது மிகக் கடினம். ஒன்று அல்லது ஒன்றரை வருடம் கிரிக்கெட் விளையாடாத போது, எந்த அடிப்படையில் அவர் மீண்டும் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், “தோனியின் இடத்தை கே.எல்.ராகுல் பொறுத்தமாக நிரப்பியுள்ளார். ராகுல் கீப்பர் பணியையும் செய்கிறார். அவரது கீப்பிங் மற்றும் பேட்டிங் இரண்டையும் நான் பார்த்தேன். கண்டிப்பாக தோனி அளவிற்கு சிறப்பாக அவரால் கீப்பிங் செய்ய முடியாது. இருந்தாலும், அவர் டி20 போட்டிகளுக்கு மிகவும் பயன்படுவார். 3 அல்லது 4வது இடத்தில் களமிறங்கவும், கீப்பிங் செய்யவும் அவரால் முடியும்” என கவுதம் கூறியுள்ளார்.