தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்றிருந்தாலும், அடுத்த டெஸ்ட் போட்டியில் லேசாக விளையாடமாட்டோம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 601 ரன்கள் குவித்தது. கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 254 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.
அதன்பின்னர் தென்னாப்பிரிக்க அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்தும், இந்திய அணியின் ஸ்கோரை எட்டமுடியாமல் இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
போட்டியின் வெற்றி குறித்து பேசிய விராட் கோலி, “அணியின் கேப்டன் என்ற பொறுப்பின் அடிப்படையில் ரன்கள் குவித்தேன். எனது எண்ணம் எப்போதும் அணியின் ஸ்கோரை அதிகபட்சமாக உயர்த்த வேண்டும் என்றே இருக்கும். நீங்கள் அணியை பற்றி யோசிக்க தொடங்கும் போது உங்கள் அழுத்தங்கள் எல்லாம் வெளியேறிவிடும். அணியில் அனைவரும் சத்தமில்லாத கொண்டாட்டத்தில் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் அடுத்த போட்டியில் நாங்கள் சிறு ஓய்வு எண்ணம் கூட இல்லாமல், இதற்கு முன்னர் விளையாடியது போன்றே விளையாடுவோம். 3-0 என்ற கணக்கில் தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம். எனவே லேசாக விளையாடமாட்டோம் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று கூறினார்.