இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் தாங்கள் இந்தியாவைதான் ஆதரிப்போம் என பாகிஸ்தான் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. இருநாடுகளின் ரசிகர்களும் போட்டியை அவ்வளவு உன்னிப்பாக கவனிப்பார்கள். சில நேரங்களில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஒட்டி சமூக வலைத்தளங்களில் இருநாட்டு ரசிகர்களிடையே கடுமையான மோதல்கூட நடக்கும்.
ஆனால், இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ரசிகர்கள் உரக்க குரல் கொடுத்து தங்கள் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களின் ஒற்றுமைக்கு வழிவகுத்த பெருமை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைனைச் சேரும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் யாருக்கு ஆதரவு தெரிவிக்க போகிறீர்கள் என பாகிஸ்தான் ரசிகர்களை நோக்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஹுசைன் ஒரு கேள்வி எழுப்பி இருப்பி இருந்தார்.
நாசர் ஹுசைனின் இந்த ட்விட்டர் பக்க கேள்விக்கு ஏராளாமான பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பெரும்பாலான பாகிஸ்தான் ரசிகர்களின் ஒரே பதில், தங்களின் அண்டை நாடான இந்தியாவுக்குதான் ஆதரவு அளிப்போம் என உள்ளது. இதில், பல சுவாரஸ்யமான கருத்துக்களையும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
இந்தியாவையும், பாகிஸ்தானையும் இங்கிலாந்து 1947இல் இரண்டாக பிரித்ததை குறிப்பிட்டு சிலர் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர். இருநாட்டு ரசிகர்கள் ஒன்றாக உள்ளது போன்ற படங்களையும் பலர் பதிவிட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி தோற்றால், அது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக முடியும். அதாவது நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பு அதிகமாகியுள்ளது.
நான்காவது இடத்திற்கான போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் உள்ளன. இங்கிலாந்து அணி 8 புள்ளிகளுடனும், பாகிஸ்தான், பங்களாதேஷ் தலா 7 புள்ளிகளுடன் உள்ளன. இங்கிலாந்து அணியின் தோல்வி தங்களுக்கு சாதகமாக அமையும் என்பதால் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளனர் என்று சிலர் கூறியுள்ளனர்.
எப்படி இருந்தாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் ரசிகர்கள் தங்களது சகோதரத்துவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். தங்கள் அண்டை நாடு என்றும், தங்கள் சகோதரர்கள் என்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் கூறியுள்ளது இந்திய ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பதும் உண்மையே.