வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு சரியான முறையில் ஓய்வு அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி பங்களாதேஷ் அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்பிறகு இந்தியாவில் பல டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளன.
எனவே இந்திய அணியில் அனைத்து வகை போட்டியில் களமிறங்கும் வீரர்களுக்கு சரியான நேரத்தில் ஓய்வு அளிக்கவேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலர் தெரிவித்துள்ளனர். இதற்கு ஏற்ற மாதிரி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு முக்கிய வீரர்கள் சிலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. எனினும் டெஸ்ட் போட்டிகளுக்கு அனைத்து முக்கிய வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு உரிய நேரத்தில் ஓய்வு வழங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் ஷர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “என்னை பொறுத்தவரை பும்ராவிற்கு இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு அளிக்கவேண்டும். ஏனென்றால் பும்ராவை போன்று ஒரு திறமையான பந்துவீச்சாளரை இந்தியா ஆடுகள சூழல்களில் சோதித்து பார்க்க தேவையில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வெல்வதற்கு பும்ரா முக்கிய பங்கு ஆற்ற வேண்டும். எனவே இந்திய ஆடுகளங்களில் பும்ராவினால் விக்கெட் எடுக்க முடியும் என்று யாருக்கும் காட்ட தேவையில்லை.
இந்தியா அணி விக்கெட் எடுப்பதற்கு கபில் தேவ் மாதிரியான வேகப்பந்து வீச்சாளர்களை நம்பியிருந்தது அந்தக் காலம். தற்போது இந்திய அணியில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் உலக தரம் வாய்ந்தவர்கள். புவனேஷ்வர் குமார், ஷமி, இஷாந்த், நவ்தீப் உள்ளிட்டவர்கள் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். ஆகவே அவர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு அளிக்க வேண்டும். பும்ராவை ஏன் அனைத்து போட்டிகளிலும் விளையாட நெருக்கடி கொடுக்க வேண்டும். ஒரு சில முக்கியமான போட்டிகளுக்கு மட்டும் பும்ரா தேர்வு செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பும்ரா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனது முதல் இதுவரை வெறும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே காயம் காரணமாக விளையாடவில்லை. அத்துடன் அவர் இதுவரை பங்கேற்ற 12 டெஸ்ட் போட்டிகளில் 451.5 ஓவர்கள் வீசியுள்ளார். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான பிறகு இவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தற்போது வரை 724.3 ஒவர்கள் வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.