ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த இலங்கை வீரர் மலிங்காவிற்கு கிரிக்கெட் வீரர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா. இவர் நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியுடன் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்தப் போட்டியில் லசித் மலிங்கா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இலங்கை அணி சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மலிங்கா 338 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடம் பிடித்தார்.
இந்நிலையில் மலிங்காவின் ஓய்வு முடிவிற்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்திய வீரர் ரோகித் ஷர்மா, “மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 10ஆண்டுகளாக முக்கிய வீரராக திகழ்ந்தவர் மலிங்கா. கேப்டனாக நான் இக்கட்டான சூழலில் அவரைப் பந்துவீச அழைத்தாலும் அவர் என்னை ஏமாற்றியதே இல்லை. அவர் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றியவர். அவருடைய வருங்கால வாழ்க்கைக்கு எனது வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, “ ‘கிளாசிக் மலி ஸ்பேல்’ கொடுத்ததற்கு மிக்க நன்றி. நான் எப்போதும் உங்களின் பந்துவீச்சை பார்த்து ஆச்சரியப்பட்டது உண்டு. எப்போதுமே அந்த ஆச்சரியம் தொடரும். நீங்கள் கிரிக்கெட்டில் சாதித்த அனைத்திற்கும் எனது பாராட்டுக்கள்” எனக் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், “உங்களுடைய சிறப்பான ஒருநாள் போட்டி பயணத்திற்கு எனது பாராட்டுக்கள்” எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், “யார்கர் கிங்கிற்கு எனது பாராட்டுக்கள். இனி மேல் கிரிக்கெட் விளையாட்டில் உங்களை போல் காலுக்கு அருகில் யார்கர் பந்துவீச யாரும் வரமாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், “கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஹெட்ரிக் எடுத்த ஒரு பந்துவீச்சாளர். அத்துடன் உலகக் கோப்பையில் 2 ஹெட்ரிக் எடுத்த ஒரே பந்துவீச்சாளர் என்ற பல சாதனைகளுக்கு மலிங்கா சொந்தக்காரர். இவர் பல இளம் வீரர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர்” எனப் பதிவிட்டுள்ளார்.