பிரேசிலின் ரீயோ டி ஜெனேரீயோ பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனைப் படைத்தார். இதன் மூலம் ஜூனியர் பிரிவில் ஏற்கெனவே சாதனைப் படைத்திருந்த இவர் தற்போது சீனியர் பிரிவிலும் கால் பதித்து கவனத்தை ஈர்த்துள்ளார். அதிகம் அறியப்படாத இளவேனில் வாலறிவனின் பின்புலம் என்ன? பேசுப் பொருளாக மாறியுள்ள இந்தச் சாதனை மனுஷியின் தந்தையிடம் பேசினோம். கூடவே அவரது தாயும் தன் மகளின் அருமை பெருமைகளை நம்மிடம் அடுக்கினார்.
உலகமே இன்று உங்கள் மகளை கொண்டாடுகிறது? எப்படி உள்ளது உங்கள் மனநிலை? என நாம் கேட்ட உடனே மகிழ்ச்சி மழையில் கலகலவென சிரித்தார் இளவேனில் தாயார் சரோஜா.
"எனது கணவர் ஒரு விஞ்ஞானி. குஜராத்தில்தான் அவர் வேலை பார்க்கிறார். என் கணவரிடம் படித்த மாணவியை ஒருமுறை யதேச்சையாக சந்தித்தோம். அவர் தன் மகள் ரியாஷாவுடன் இருந்தார். இந்தச் சந்திப்பின்போது இவரது மகள் அகமதாபாத்தில் உள்ள கோக்ரா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில் துப்பாக்கிப் பயிற்சி எடுத்து வருவதை அறிந்தோம். இதைக்கேட்ட இளவேனிலுக்கு அதை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டாள். அதை எங்களிடமும் சொன்னாள்.
நாங்களும் ஒருமுறை அவளை அங்கு அழைத்து சென்றோம். அப்போது ரியாஷா துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாள். அவளின் துப்பாக்கிச் சுடும் முறையும், ரியா அணிந்திருந்த உடையும் என் மகளை பெரிதும் கவர அவளும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி சேர விரும்புகிறேன்" என்றாள்.
அப்போது ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த இளவேனிலை ஒருமுறை மே மாத பள்ளி விடுமுறையின் போது அகமதாபாத்தில் உள்ள ரைபிள் அசோசேஷியனுக்கு ஐந்து நாள் பயிற்சிக்காக அனுப்பினோம். அந்த ஐந்து நாள் பயிற்சி அவளுக்குள் துப்பாக்கிச் சுடுதலில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் ரைபிள் அசோசேஷியனில் உறுப்பினராக சேர்ந்தாள். அவ்வப்போது பயிற்சியில் ஈடுபட்ட இளவேனில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது புனேவில் ஆண்டு தோறும் நடைபெறும் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அவள் பங்கேற்றாள். அதில் வெண்கல பதக்கம் வென்றாள். அது அவளுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது.
அதன் பின் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டிக் கொண்டிருந்த இளவேனில் சொந்தமாக துப்பாக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக பயிற்சி செய்வேன் என்றாள். இதனால் அவளுக்கு நாங்கள் சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் துப்பாக்கியை வாங்கி கொடுத்தோம். அதன் எடை சுமார் 5 kg இருக்கும். இதற்காக அவள் அணிந்திருக்கும் ஆடையின் எடை சுமார் 11 kg இருக்கும்.
இதை நாங்கள் தூக்கிச் செல்லவே சிரமப்படுவோம். ஆனால் அவளோ ஒவ்வொரு முறையும் அதை தூக்கும் போது எனது கையில் மிகப் பெரிய ஆயுதம் கிடைத்துள்ளது எனவே அதை என்னால் முடிந்த வரை சிறப்பாக பயன்படுத்துவேன் என்பாள். அந்த ஆடையை அணிந்து அவள் நடக்கும்போது ஒரு ரோபோ நடப்பது போன்றே இருக்கும்.
அதன் பின் அவள் சிறப்பாக துப்பாக்கிச் சுடுதலை தீவிரமாக மேற்கொண்டாள். ஸ்போர்ட்ஸ் ஆதாரட்டி ஆப் குஜராத், மாவட்ட அளவிலான சில பள்ளிகளில் துப்பாக்கிச் சுடுதலில் திறமை மிகுந்த வீரர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கும். அதில் இளவேனிலும் தேர்வானாள். அந்தப் பள்ளிக்கு மாற்றப்பட்ட பின்னர் அவளின் படிப்பு உள்ளிட்ட செலவுகளை குஜராத் அரசே ஏற்றுக்கொண்டது என்றார்.
அவளது பயிற்சி பற்றி?
2017ஆம் ஆண்டு ‘கன் ஃபார் குளோரி அகடாமி’ பொறுப்பாளர் ககன் நரங் துப்பாக்கிச் சுடுதலில் இளம் வீரர் மற்றும் வீராங்கனைகளை கண்டறிந்து பயிற்சியளிக்க ‘புராஜெக்ட் லீப்’ (Project Leap) என்ற திட்டத்தை ஆரம்பித்தார். அதில் இளவேனில் தேர்வானாள். இதனைத் தொடர்ந்து அவளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க குஜராத் அரசு நேகன் சாவல் என்ற பயிற்சியாளரை நியமித்தது. தினமும் அதிகாலையிலே எழுந்து பயிற்சியாளரை தன்னுடன் அழைத்துக்கொண்டு 60 கி.மீ பயணம் செய்து பயிற்சியில் ஈடுபடுவாள்.
ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுவாள். அதில் இரண்டு மணி நேரம் யோகா உள்ளிட்ட பயிற்சிகள். நான்கு மணி நேரம் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிகள். இதுமட்டுமல்லாமல் மனதை ஒருமைப்படுத்துவதற்காக ஓவியம் வரைதல் மற்றும் cube பயிற்சிகள் போன்றவற்றைச் செய்வாள். cube இல் இளவேனிலுக்கும் அவளது சகோதரனுக்கும் இடையே அடிக்கடி போட்டிகள் கூட நடக்கும்.
நீங்கள் இருவரும் பிஎச்.டி பட்டம் பெற்று இருக்கிறீர்கள், குழந்தைகளும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கவில்லையா?
“எங்களுக்கு அவளின் எதிர்காலம் குறித்து கவலை இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளின் விருப்பமும் முக்கியம். ஆகவே அவளின் விருப்பத்திற்கே நாங்கள் விட்டுவிட்டோம். ஆனால் ஒன்று மட்டும் கூறினோம் தயவு செய்து தேர்வில் தோல்வி மட்டும் அடைந்து விடக்கூடாது என்று. அதை அவள் தற்போது வரைக் காப்பாற்றி வருகிறாள். இப்போது அவள் ஆங்கில இலக்கியம் படித்து வருகிறாள்”
இதனை அடுத்து இளவேனில் தந்தை பேசினார்.
“இளவேனில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் ஈடுபடுவதற்கு முன்னால் மிகவும் கோபப்படுவாள். இப்படிதான் ஒருமுறை பள்ளியில் மூத்த மாணவன் ஒருவன் தனது உணவை அனுமதியின்றி எடுத்து சாப்பிட்டதற்காக அவனின் சட்டையை பிடித்துச் சண்டை போட்டாள். ஆனால் தற்போது அவள் மிகவும் அமைதியாகி விட்டாள். வெவ்வேறு ஊர்களிலும், நாடுகளிலும் நடைபெறும் பயிற்சிகளுக்கும் சரி, போட்டிகளுக்கும் சரி தனியாகதான் செல்கிறாள். ஒரு முறை சென்னைக்கு பயிற்சிக்காக சென்றபோது, இவரது திறமையை பார்த்த அதிகாரி ஒருவர் ‘நீ தமிழ்நாடு சார்பில் விளையாடு நான் அரசு சார்பில் 25 லட்சம் ரூபாய் வாங்கி தருகிறேன்’ என்று சொன்னதாகவும், ஆனால் நான் ஒரு இந்தியராக குஜராத் சார்பில் விளையாட விரும்புகிறேன் என்று இளவேனில் மறுத்ததாகவும் அவள் எங்களிடம் தெரிவித்தாள்” என்றார்.
ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் நல்ல புலமை இருப்பதால் அவளால் எளிதாக எல்லா இடங்களுக்கும் பயணிக்க முடிகிறது என்றும் பணி நிமித்தமாக எங்களால் அவளிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியவில்லை என்பதில் எங்களுக்கு வருத்தம் இருக்கிறது என்றும் அவரது தந்தை நம்மிடம் கூறினார்.