கவலைப்பட வேண்டாம்; காஷ்மீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் மகனே என முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பி-யுமான காம்பீர் பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடிக்கு பதில் அளித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஷகித் அஃப்ரிடி, “ஐநா உறுதியளித்தபடி காஷ்மீரிகளுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். சுதந்திர உரிமைகள் என்பது அனைவருக்குமானது தான். ஐநா சபை ஏன் உருவாக்கப்பட்டது ? அது ஏன் தற்போது தூங்குகிறது ? தூண்டப்படாத ஆக்கிரமிப்புகளும், குற்றங்களும் காஷ்மீரில் மனிதத்துக்கு எதிராக அரங்கேறிவருவது கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் இதில் நடுநிலையாக செயல்பட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள காம்பீர், “அஃப்ரிடி, நபர்களை அடையாளம் கண்டுவிட்டார். அங்கே ஆக்கிரமிப்பு எதுவும் தூண்டப்படவில்லை. இவை அனைத்து குற்றச் செயல்களுக்கு எதிரான மனிதநேய நடவடிக்கை. இதற்கு இவர் சத்தம் போடுகிறார். ஆனால் இவர் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் நடக்கும் அனைத்து சம்பவங்கள் குறித்தும் கூற மறந்துவிட்டார். கவலை வேண்டாம், அவை உடனே தீர்க்கப்படும் மகனே!!” எனப் பதிலளித்துள்ளார்.