காஞ்சிபுர விண்ணகர கோவிலுக்கும் அங்கோவார்ட் கோவிலுக்கும் என்ன ஒற்றுமை?

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, கலாசார அமைப்பான யுனெஸ்கோவினால் ‘உலக பண்பாட்டுச் சின்னம்’ என்ற சிறப்புக்குரிய தகுதி பெற்ற வழிபாட்டுத்தலம் இது. கம்போடியாவின் சின்னமாகவும் இக்கோவிலானது இருக்கிறது
விண்ணகரகோவில் காஞ்சிபுரம்
விண்ணகரகோவில் காஞ்சிபுரம்Twitter
Published on

கம்போடியா நாட்டின் அரசர் நோரோடோம் சிஹாமோனி, மூன்று நாள் அரசு பயணமாக இந்தியா வந்திருப்பது இந்தியா கம்போடியா நாடுகளுக்கிடையே இருக்கும் உறவை மேலும் வலுப்படுத்தி உள்ளது. இதற்கு அறுபது வருடம் முன்னதாக அதாவது 1963ல் இவரது தந்தை இந்தியா வந்திருந்தார்.

கம்போடிய மன்னர் நோரோடோம் சிஹாமோனியின் இந்திய வருகையானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இந்தச் சந்திப்பில், பிரதமர் மோடி மற்றும் அரசர் நோரோடோம் சிஹாமோனி ஆகிய இருவரும், பிராந்திய மற்றும் பலதரப்பு பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

“கம்போடியாவின் மன்னர் ஹெச்.எம்.நோரோடோம் சிஹாமோனியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாடுகள் ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன, மேலும் நமது நட்பையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம். அவரது வருகை இந்தியா-கம்போடியா உறவில் ஒரு புதிய அத்தியாயமாக அமையட்டும்” என்று பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை ட்வீட் செய்துள்ளார்.

இந்தியா கம்போடியா விக்கு இடையே நீண்ட கால தொடர்பு உள்ளது. தமிழர்கள் தான் கம்போடியாவை ஆட்சி செய்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கான சான்று அங்கோவார்ட் ஆலயம். இதை பற்றி விரிவாக காணலாம்.

அங்கோவார்ட் ஆலயம்:

கம்போடியா நாட்டில் அங்கோவார்ட் கோவிலானது சுமார் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோவில் 213 அடி உயர கோபுரத்தையும் 400 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவையும் கொண்டது. தொழில்நுட்பம் இல்லாத அந்நாட்களில் சாதாரன கருவிகளைக் கொண்டு செதுக்கப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளார்கள் கூறுகின்றனர். இதன் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட கல்லின் எடையானது தோராயமாக 5,20,00,000 டன்கள் இருக்கலாம் என்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் ‘உலக பண்பாட்டுச் சின்னம்’ என்ற சிறப்புக்குரிய தகுதி பெற்ற வழிபாட்டுத்தலம் இது. கம்போடியாவின் சின்னமாகவும் இக்கோவிலானது இருக்கிறது.

கோவிலின் வரலாறு!

பத்தாம் நூற்றாண்டில் கம்புதேசத்து அரசனான சூரியவர்மன், தனது நண்பனும் சோழப்பேரரசருமான ராஜேந்திர சோழனுடன், மலேசியாவில் உள்ள தாம்பரலிங்கா நகரை கைப்பற்ற எண்ணினான். ஆனால் தாம்பரலிங்காவின் அரசன் (பெயர் தெரியவில்லை) தனக்கு உதவியாக கடாரத்து மன்னனான சங்கரம விஜயதுங்கவர்மனின் உதவியை நாடி இருக்கிறான். போர் மூண்டது, இரு பிரிவினருக்கும் பெரும் போர் நடந்துள்ளது. சோழப்பேரசரான ராஜேந்திரன் ஒரே நாளில் கடாரத்தை கைப்பற்றியதுடன் சங்கரமன விஜயேந்திரனையும் அடிமைப்படுத்தி இருக்கிறான். அதனாலேயே ராஜேந்திர சோழனுக்கு கடாரம் கொண்டான் என்ற பெயரும் ஏற்பட்டது. இதை நினைவுகூறும் வகையில் கம்போடிய அரசு ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைத்துள்ளது. அதன் பிறகு இக்கோவிலானது சூரிய வர்மனால் கட்டப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க... கம்போடியா நாட்டில் மூன்று வகையான அரச மரபு இருக்கிறது. அவை ஃபூனன்,சென்னால், கேம்மர் என்கிறார்கள்.

சோழ அரசரான நெடுமுடி கிள்ளி நாகநாட்டை சேர்ந்த ஒரு அரசியுடன் வாழ்ந்து வந்த சமயத்தில், திடீரென அரசி அவனைவிட்டு மணிபல்லவ தீவிற்கு சென்று விடுகிறாள். பின் அத்தீவில் அவள் ஒர் ஆண் குழந்தையை பெற்றெடுத்து அதை ஆதொண்டை கொடியைக்கொண்டு சுற்றி, ஒரு பெட்டியில் வைத்து அதை சோழநாட்டைச் சேர்ந்த கம்பள செட்டி என்பவரிடம் தந்து அதை நெடுமுடியிடம் சேர்க்குமாறு தருகிறாள். கம்பள செட்டியும் அக்குழந்தையை தொனியின் மூலம் கொண்டு வரும் சமயம், கடலில் ஏற்பட்ட ஒரு அலையில் அக்குழந்தை தவறி விழுந்து ஏதோ ஒரு இடத்தில் கரை சேர்கிறது. இக்குழந்தையை தனது வாரிசாக கரிகால் சோழன் ஏற்றுக்கொள்கிறான் அக்குழந்தை தான் இளந்திரையன் தொண்டைமான் என்ற பல்லவர்.

நெடுமுடி கிள்ளி வளவன் காலத்தில் பூம்புகார் கடல்கொள்ளை கொண்ட சமயத்தில், கிள்ளி வளவன் கடல் கடந்து கம்போடியா நாட்டிற்கு சென்றுவிட்டதாகவும் அவன் தான் ஹிவண்டியன் அரசன் என்றும் இவன் வழிவந்தவர்கள் தான் ஃபூனன் வாரிசு எனவும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவனது வம்சத்திற்கு பிறகு தான் பீமவர்மன் ஆட்சி அமைகிறது. (இவரது பேரன் தான் இரண்டாம் நந்தி வர்மன். இவர் தான் பின் நாளில் காஞ்சிநகரை ஆண்டதாக வரலாற்று ஆய்வாளார்கள் கூறுகின்றனர்.)

அங்கோவார்ட் கோவிலின் அமைப்பு

இது மூன்று கோபுரங்களைக்கொண்டு மேற்கு நோக்கி கட்டப்பட்ட ஒரு விஷ்ணு கோவிலாகும். பிரகாரத்திற்கு வெளியே இரண்டு சிங்க சிலைகளைக் காவலாகக் கொண்ட நுழைவுவாயில், அந்த நுழைவு வாயில் வழியே கோயிலின் உள்ளே சென்றதும் விதவிதமான சிற்பங்கள், வித்தியாசமான சன்னல்கள், கதவுகள், மிக நீண்ட பிரகாரங்கள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பல தோற்றங்களில் தேவ மங்கையரின் சிலைகள், பொற்றாமரைக் குளம், இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணக் காட்சிகள் அத்துடன் இரண்டாம் சூர்ய வர்மணின் அரசவைக் காட்சிகள் தத்ரூபமாக சித்திரிக்கப்பட்டுள்ளன.

புத்தர் கோவிலாக மாறிய வரலாறு

சூரிய வர்மன் இந்து மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது வாரிசுகள் பௌத்தமதத்தை தழுவியவர்களாக இருந்தனர். சூரியவர்மனின் காலத்திற்கு பிறகு அவரது வாரிசுகள் விஷ்ணு சிலைகளை அகற்றி விட்டு அங்கு புத்தர் சிலையை நிறுவி வழிபாட்டு தலமாக மாற்றிவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுர விண்ணகர கோவில்

பல்லவ மன்னர்கள் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கோயில் இது. 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோயிலாகும். இரண்டாம் நந்திவர்மன் இக்கோயிலை கட்டியிருக்கலாம் என்றும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய குடவரை அமைப்புடன் கூடிய புடைப்பு சிற்பங்கள் அதிக அளவில் உள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள விண்ணகரக்கோவிலுக்கும் (வைகுண்டபெருமாள் கோவில்) அங்கோவார்ட் கோவிலுக்கும் உள்ள ஒற்றுமை:

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமள் கோவிலானது 8ம் நூற்றாண்டில் இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்ட திருத்தலம். இங்கு மூன்று தலம் (ப்ரமீட் வடிவில்) அமைக்கப்பட்டு அடித்தளத்தில் பெருமாள் அமர்ந்த கோலத்திலும் நடுத்தளத்தில் பெருமாள் சயனித்த கோலத்திலும் மேல் தளத்தில் பெருமாள் நின்றகோலத்திலும் காட்சி அளிக்கின்றார். இங்கு பரமபத வாசல் கிடையாது. இக்கோவிலைச்சுற்றி பல சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் இரண்டாம் பல்லவமன்னன், இரண்டாம் நந்திவர்மன் காலத்திற்கு முற்பட்ட அரசர்களின் வாழ்க்கை வரலாற்றை சிற்பமாக வடிவமைத்துள்ளார்கள்.

இச்சிற்பத்தில் சொல்லப்படும் செய்தி என்னவென்றால்... இரண்டாம் பரமேஸ்வர என்ற பல்லவ அரசருக்கு சிம்மவர்மன், பீம வர்மன் என்று இரு வாரிசுகள் இருந்தார்களாம். அதில் பீம வர்மன் கடல் கடந்து சென்று (கம்போடியாவாக இருக்கலாம்) ஆட்சி செய்து வந்துள்ளார்.

அதே சமயம் காஞ்சிபுரத்தை ஆண்ட மன்னர் இறந்த பிறகு காஞ்சிபுரத்தை பீம வர்மனின் கடைசி மகனான இரண்டாம் நந்திவர்மன் ஆட்சி செய்ததாக வரலாற்று ஆய்வாளார்கள் கூறுகின்றனர். ஆகையால் அங்கோவார்ட் ஆலயமும் காஞ்சிபுர வின்னகர ஆலயமும் வடிவமைப்பில் பல ஒற்றுமைகளை கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதன் ஒற்றுமை என்னவென்று பார்க்கலாம்.

இரண்டு கோவில்களும் மேற்கு பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சி கோவிலின் வடிவமைப்பை பார்த்து தான் அங்கோவார்ட் கோவில் கட்டப்பட்டுள்ளது.

இருகோவில்களும் ப்ரமீட் வடிவில் கட்டப்பட்டுள்ளது.

காஞ்சிபுர விண்ணகர கோவிலை, 'பரமேசுவர விண்ணகரம்' அதாவது, 'விஷ்ணுவின் நகரம்' என்று கொள்ளலாம். அங்கோர்வாட் என்று அழைக்கப்படும் கோவிலின் ஆதிகாலப்பெயர் 'விஷ்ணுலோக்' என்பதாகும். விஷ்ணுவின் உலகம் என்பதைக் குறிப்பதற்காக இந்தப் பெயர் வைக்கப்பட்டது.

இரு கோவில்களிலும் சந்நிதியைச் சுற்றி 4 அடி ஆழத்திற்கு அகழி அமைக்கப்பட்டுள்ளது. அகழிக்கு தண்ணீர் வருவதற்கும் வெளியே செல்வதற்கும் தூம்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு கோவில்களிலும் புடைப்பு சிற்பங்களால் செதுக்கப்பட்டுள்ளது.

பாற்கடலில் அமிர்தம் எடுப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் சமுத்திரத்தைக் கடைந்த சிற்பமானது இருகோவில்களிலும் செதுக்கப்பட்டுள்ளது.

அங்கோர்வாட் கோவிலும் காஞ்சிபுர விண்ணகர கோவிலும் ஒரே மாதிரியான ஒற்றுமைகளைக் கொண்டு இருப்பதால், காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற ஓருவர், வைகுண்டபெருமாள் கோவில் அடிப்படையில் அங்கோர் வாட் கோவிலை அமைப்பதற்கு கம்போடிய மன்னர் சூரியவர்மனுக்கு ஆலோசனை சொல்லி இருக்கலாம் என்றும், அதன்படி அங்கோர்வாட் கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com