உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனர்.
இந்நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சியம்மனும், பிரியாவிடை அம்மன் சமேதமாக கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுந்தரேஸ்வரர் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரியதேரில் பிரியாவிடை சமேதமாக சுந்தரேஸ்வர் சிறப்பு அலங்காரத்திலும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். இதையடுத்து திருக்கல்யாணத்தை காண முடியாத முதியோர்கள் மற்றும் பக்தர்கள் காணும் வகையில், சுவாமியும், மீனாட்சியம்மனும் மணக்கோலத்தில் எழுந்தருளி வலம் வருகின்றனர்.
தேரோட்டம் தொடங்குவதற்கு முன் அங்குள்ள தேரடி கருப்பணசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து பெரிய தேர் புறப்பட்டது. அதைத் தொடர்ந்து மீனாட்சியம்மன் எழுந்தருளிய சிறிய தேரும் புறப்பட்டது. திருத்தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை செல்ல, அதைத் தொடர்ந்து விநாயகர், முருகன் மற்றும் நாயன்மார்களும் எழுந்தருளிய தேர்கள் செல்கின்றன.
இந்த சித்திரை திருத்தேர், நான்கு ரத வீதிகளான கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வந்து பின்னர் கீழமாசி வீதியில் உள்ள தேரடியை வந்தடையும். மாசி வீதிகளில் ஆடியசைந்து வரும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் சிவ பக்தர்கள் வந்தனர். சிவ பக்தர்கள் சங்கு ஊதியும், பல்வேறு இசைகளை இசைத்தபடியும் பதிகம் பாடியபடியும், பக்தி கோஷங்களை எழுப்பியபடியும் வந்தனர். தொடர்ந்து தற்போது அனைவரும் இணைந்து தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.