திருநீலகண்ட நாயனாரை அவர் மனைவியுடன் சேர்த்துவைக்க சிவபெருமான் செய்த செயல்!

நாயன்மார்கள் ஒவ்வொருவரின் பக்தியும் வெவ்வேறானதாக இருந்தாலும், அனைவரும் சிவபெருமானின் மீது ஒருமித்த பக்தியை கொண்டிருந்தனர்.
நீலகண்ட நாயனார்
நீலகண்ட நாயனார்கோப்புப்படம்
Published on

63 நாயன்மார்களில் இன்று நீலகண்ட நாயனாரின் வரலாறு என்ன என்பதைப் பார்க்கலாம். தில்லையில் குயவர் குலத்தில் பிறந்தவர் நீலகண்ட நாயனார். சிவபெருமான் மீதும் அடியவர்கள் மீதும் அரும் பக்தி கொண்டவர். அடியவர்களுக்கு திருவோடு செய்துக் கொடுத்து தனது பக்தியை வெளிக்காட்டினார்.

ஒருமுறை நீலகண்டர் தனது மனைவியை தவிர்த்து வேறு ஒரு பெண்ணை நாடினார். இதையறிந்த அவரது மனைவி நாயனாரிடம் கோபம் கொண்டு, “இனி நீங்கள் என்னை தீண்டக்கூடாது. அவ்வாறு என்னை தீண்டினால் நான் உயிரை விட்டுவிடுவேன். இது சிவபெருமான் மீது சத்தியம் “ என்று கூறினார்.

சிவபெருமான் மீது சத்தியம் செய்ததால் அந்நிமிடத்திலிருந்து, கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் மனதால் ஒருமித்தவர்களாக இருந்தாலும் உடலால் தொடர்பின்றி இருந்தனர். இருப்பினும் இருவரும் சிவதொண்டர்களுக்கு தொண்டு செய்து வந்தனர். இப்படி ஆண்டுகள் பல ஓடின. நீலகண்டரும் அவரது மனைவியும் முதுமையடைந்தார்கள். முதுமையிலும்கூட நீலகண்டர் சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டு சிவ தொண்டர்களுக்கு திருவோட்டை செய்து கொடுத்து வந்தார்.

நீலகண்டரையும் அவரது மனைவியையும் மீண்டும் வாழ்வினில் இணைத்திட விரும்பிய சிவபெருமான், ஒரு அடியவர் போல் உருவம் கொண்டு நீலகண்டரின் வீட்டை அடைந்தார்.

வாசலில் அடியவர் ஒருவர் வருவதைக்கண்ட நீலகண்டரும் அவரது மனைவியும் அவரை வரவேற்று உபசரித்தனர். பின் அடியவராய் வேடம் தரித்து வந்த சிவபெருமான், நீலகண்டரிடத்தில் ஒரு திருவோட்டினை கொடுத்து, “நீலகண்டா... இது புனித திருவோடு. இதை நான் திரும்பி வந்து கேட்கும் வரையில் இதை பத்திரமாக வைத்திருக்கும் பொறுப்பு உன்னுடையது” என்று கூறி நீலகண்டரிடம் திருவோட்டை கொடுத்துவிட்டு சென்றார்.

நீலகண்ட நாயனார்
‘தடங்கல்களில் கவனம் செலுத்தினால் என்ன ஆகும்?’ - ஸ்ரீமத் பாகவதத்தில் ஜடபரதர் உணர்த்தும் நீதி!

நாட்கள் பல கடந்தன. நீலகண்டர், அடியவர் தந்து சென்ற திருவோட்டை மறந்து போய் இருந்தார். ஒரு நாள் அதே அடியவர் நீலகண்டரின் வீட்டிற்குச் சென்று, தான் கொடுத்த திருவோட்டை திரும்பக் கேட்டார். அப்பொழுது தான் நீலகண்டருக்கு அத்திருவோட்டின் நினைவு வந்தது. அதைப் பத்திரப்படுத்தி வைத்திருந்த இடத்தில் சென்று பார்க்கும் சமயம் அத்திருவோடானது காணாமல் போய் இருந்தது.

மனம் பதைத்த நீலகண்டர் அடியவரிடம் சென்று வணங்கி, “அடியவரே என்னை மன்னிக்க வேண்டும். நாட்கள் ஆனதால் உங்கள் திருவோட்டினை காக்க தவறிவிட்டேன். ஆகையால் அது காணாமல் போய்விட்டது” என்றார். அதைக்கேட்ட அடியவர் மிகவும் கோபம் கொண்டு, “எனது திருவோட்டினை இப்பொழுதே தரவேண்டும் இல்லையென்றால் நடப்பதே வேறு” என்று கூறிவிட்டார். இதைக்கேட்டு நடுநடுங்கிய நீலகண்டர், பழைய திருவோட்டிற்குப்பதிலாகப் புதிதாக வேறு திருவோடு செய்து தருவதாகக் கூறினார்.

ஆனால் அடியவரோ பெருமைமிக்கத் தனது திருவோடு தான் வேண்டும் என்று கூறவும், என்ன செய்வது என்று தெரியாமல் நீல கண்டரும் அவரது மனைவியும் நடுங்கினர்.

நீலகண்ட நாயனார்
மகன் இறந்திருந்தாலும் திருநாவுகரசருக்கு அன்னமிட நினைத்த அப்பூதி அடியவரின் வியப்பூட்டும் பக்தி!

மேலும் அடியவர் “எனது புனிதமான திருவோட்டை நீங்கள் இருவரும் திருடி விற்றிருப்பீர்கள். அதனால் தான் உங்களிடம் அத்திருவோடானது இல்லை” என்றார். அதைக்கேட்ட நீலகண்டர், “ஐயா என் மேல் ஆணையாக அதை நாங்கள் திருடவில்லை” என்றார்.

உடனே அடியவர், “அப்படியேன்றால் நீங்கள் இருவரும் ஒன்றாகக் குளத்தில் மூழ்கி சத்தியம் செய்யுங்கள். அப்பொழுது நான் நம்புகிறேன்” என்று கூறினார். அடியவரின் சத்தத்தால், அதற்குள் மக்கள் அங்கு கூடி விட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் அடியவர் சொல்வது போல் செய்யுமாறு நீலகண்டரையும் அவரது மனைவியையும் வற்புறுத்தவும், வேறு வழியில்லாமல் தனக்கும் தனது மனைவிக்குமான ஊடலை அங்கிருந்தவரிடம் தெரிவித்தார் நீலகண்டர்.

ஆனாலும் அடியவரும், அங்கிருந்தவரும் நீலகண்டரை வற்புறுத்தனர். இதனால் ஒரு நீளமான மூங்கிலின் ஒருபுறத்தை நீலகண்டரும் மறுபுறத்தை அவர் மனைவியும் பிடித்தபடி தண்ணீரில் மூழ்கி சத்தியம் செய்தனர். ஆனால் அதை சிவனடியவர் ஒத்துக்கொள்ளவில்லை. மாறாக கணவன் மனைவி இருவரும் ஒன்றாகக் கைகோர்த்தபடி மூழ்கி எழ வேண்டும் என்றார். வேறு வழியில்லாமல் நீலகண்டரும் அவர் மனைவியும் ஒன்றாகக் குளத்தில் மூழ்கி எழுந்தனர். அச்சமயம், அவர்கள் இருவரின் முதுமையும் நீங்கி இளமையாக மாறினர்.

அங்குக் கூடியிருந்த அனைவருக்கும் மிகவும் ஆச்சர்யமாகப் போனது. சிவனடியவராக வந்த சிவபெருமான், இருவரையும் ‘இவ்வாலிபத் தோற்றத்துடன் எப்பவும் என்னுடன் இருங்கள்’ எனக்கூறி சிவலோகம் கூட்டிச்சென்றார் என்கின்றன புராணங்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com