உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இன்று காலை எழுந்திருளினார் கள்ளழகர். அப்போது ‘கோவிந்தா கோவிந்தா’ என பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் முழுக்கமிட்டனர். விண்ணைப் பிளக்கும் அதிர்வேட்டுகளுடன் கள்ளழகரை பக்தர்கள் வரவேற்றனர். மதுரை மாநகரில் திரும்பிய இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சியை காணமுடிந்தது.
காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர். அதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.
இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 4ஆவது நிகழ்வாக நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி தொடங்கி புதூர், டிஆர்ஓ காலனி, ரிசரவ்லைட், அவுட்போஸ்ட் தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர்.
தொடர்ந்து நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று அதிகாலை 2.30 மணிக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்திலும் அதன் பின்னர் ஆயிரம்பொன்சப்பரத்திலும் எழுந்தருளினார் கள்ளழகர். தொடர்ந்து காலை 5.45 - 6.15 மணியளவில் வைகை ஆற்றில் கம்பீரமாக இறங்கினார் அழகர்.
மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர். ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார். வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை, ராமர் பாதம் தாங்கிகள் முன்னே சர்க்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர்.
* மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கல்யாணத்தைக் காண அழகர் மலையில் இருந்து கள்ளழகர் கோலாகலமாக இறங்கிவருவார்
* மதுரை வரும் வழியில் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் தங்கை மீனாட்சி திருமணத்தை காண முடியாமல் போகிறது
* தங்கை திருமணத்தை பார்க்க முடியாத கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதாக ஐதீகம் கூறுகிறது; அப்படி ஆற்றில் இறங்கும்போது ‘சாபத்தால் தவளையாக மாறிப்போன’ சுதபஸ் முனிவருக்கு அவர் சாபவிமோசனம் அளிப்பதையும் புராணங்கள் கூறுகின்றன
* ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சூடிக்கொடுத்த நாச்சியாரான ஆண்டாளின் மாலையை அழகர் சாற்றிக் கொண்டார்
* சைவத்தையும், வைணவத்தையும் இணைக்கும் திருவிழாவான சித்திரைத் திருவிழாவால் மதுரையே விழாக்கோலம் பூண்டது
அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா...என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும்.
அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
* பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.
* சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.
* வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும்.
* மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும்.
இப்படி பல நம்பிக்கைகள் இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
இதில் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இன்று காலை எழுந்திருளினார் கள்ளழகர்
அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது.
அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள் (இன்று) இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர்.
ஆறாம் நாள் (நாளை) அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை நடக்கும்.
தொடர்ந்து சித்திரை திருவிழாவின் அடுத்தடுத்த நாட்களில் என்னென்ன நிகழ்வுகள் இருக்குமென இங்கே தெரிந்துகொள்ளுங்கள்...