ஜார்கண்ட் மாநிலத்தின் தேவ்கர் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது வைத்தியநாதலிங்க திருக்கோயில். இது 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று.
இங்கு சிவபெருமான் ஆவுடை வடிவமாக காட்சி அளிக்கிறார். இதன் அருகிலேயே ஹர்த்த பீடம், அதாவது 51 சக்தி பீடத்தில் தேவியின் இதயம் விழுந்த இடமான சக்தி பீடமும் இருக்கிறது. சக்தி பீடகோபுரத்தையும் வைத்தியநாத கோயிலின் கோபுரத்தையும் சிவப்பு நூலினால் இணைத்துள்ளனர். இத்தலத்தில் சிவபெருமான் தோன்றிய வரலாறு என்ன என்பதை பார்க்கலாம்.
இராவணன் அதீத சிவபக்தன். ஒருசமயம் கைலாயத்திலிருக்கும் சிவபெருமானை தனது தேசத்திற்கு அழைத்துச்செல்ல விரும்பிய இராவணன் அவருக்கு பிடித்த சாமகானத்தை இசைத்து யாகம் வளர்த்து கடும் தவம் புரிந்தான். ஆனால் சிவபெருமான் அவனை சோதித்தார். அதனால் தனது பக்தியை வெளிகாட்ட நினைத்த இராவணன் தனது ஒவ்வொரு தலையாக கொய்து யாகத்தில் இட்டு வந்தான். இதை கண்ட சிவபெருமான் அவனை தடுத்து அவனுக்கு வெட்டிய தலை வளரும் படி அருள் செய்தார். பிறகு இராவணன் விரும்பிய படி ஆத்ம லிங்கத்தைப் பெற்றான்.
இராவணனின் காயத்தை போக்கியதால் ஆத்மலிங்கம் வைத்தியநாதராக அறிப்படுகிறார். இராவணன் அந்த ஆத்மலிங்கத்தை தூக்கிக்கொண்டு இலங்கை நோக்கி சென்ற சமயம், இருட்ட தொடங்கியதால், இராவணன் அந்திம காரியங்கள் புரிவதற்காக சிவலிங்கத்தை ஒரு சிறுவனிடம் கொடுத்து சிறிது நேரம் வைத்திருக்குமாறு கூறினான். ஆனால் சிறுவனோ அதை அம்பிகை இருக்கும் இடத்தில் வைத்துவிட்டு சென்றுவிட்டான். இச்சமயம் திரும்பி வந்த இராவணன் சிறுவன் விட்டுச்சென்ற சிவலிங்கத்தை எடுக்க முயற்சித்தான். ஆனால், அவனால் அது முடியாமல் போகவே, லிங்கத்தை அங்கேயே விட்டு விட்டு சென்றதாக சரித்திரம் உண்டு.
இங்கிருக்கும் சந்திர ஹூபம் கிணறானது இராவணனால் தோற்றுவிக்கப்பட்டது என்றும் அந்த நீரினைக்கொண்டு தினமும் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இக்கோவிலுக்கு பைஜூநாத் என்ற பெயரும் உண்டு. இக்கோவிலின் 4 புறமும் வாயில்கள் உண்டு. கிழக்கு கோயிலின் பிரதான வாயில். இதற்கு சிம்ம வாயில் என்றும் பெயருண்டு.
சிவபுராணம், பத்ம புராணம், பிரம்மாண்ட புராணம், மத்சயபுராணம் காளிகா புராணம், தேவி பாகவதம் போன்றவைகளில் இக்கோயிலை பற்றிய தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆடி மாதத்தில் பல லட்சம் மக்கள் சுல்தான்கஞ்ச் என்னும் இடத்திலிருந்து கங்கை நீரை குடங்களில் சுமந்து வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சி மிகவும் ப்ரசித்தம் பெற்றது. இதனால் மக்கள் தங்களின் பாவங்களை தொலைப்பதுடன் உடலில் இருக்கும் கொடிய நோயும் குணமாகும் என்பது நம்பிக்கை