108 திவ்ய தேசங்கள் குறித்து நாம் பார்த்து வருகிறோம். இன்றைய தொகுப்பில் நான்காவது திவ்யதேசமான திருவெள்ளாரை, அதாவது ஸ்வேதகிரி என்றும் அழைக்கப்படும் ஸ்தலத்தை தான் காணப்போகிறோம். இது மணச்சநல்லூர் அருகில் இருக்கிறது. ஆழ்வார்கள் பாசுரம் இயற்றிய தலம்.
இத்திருத்தலத்தில் உத்தராயணம், தஷிணாயணம் என்று இரு வாசல்கள் உண்டு. இது வராக ஷேத்திரம். பெருமாளின் திருநாமம் புண்டரீகாட்சன். தாயாரின் திருநாமம் பங்கயச்செல்வி , செண்பகவல்லி என்றும் அழைக்கப்படுகிறாள் . இத்தலத்தில் தாயாருக்கு தான் முதல் மரியாதை. ஸ்வஸ்திக் போன்று காணப்படும் பூங்கிணற்றில் நாச்சியார், தவம் இருந்து புண்டரீகாட்சரை விவாகம் செய்துக்கொண்டதாக புராணங்கள் கூறுகிறது.
இத்திருத்தலம் தோன்றிய வரலாற்றை பார்க்கலாம்.
ஒருமுறை சிபி சக்கரவர்த்தி என்ற அரசன் தனது படைகளுடன் குன்றின் மேல் இளைப்பாரிக்கொண்டிருந்த சமயம், அழகான குட்டி வெள்ளை வராகம் (பன்றி) ஒன்று அக்குன்றில் மேல் விளையாடிக்கொண்டிருந்தது. அதைக்கண்டவுடன் சிபி சக்கரவர்த்திக்கு ஆசை வந்தது. வராகத்தை எப்படியாவது பிடித்து தன்னுடன் கொண்டுசெல்ல ஆசைப்பட்டு அதை துரத்தினான். ஆனால், அந்த வராகம் இவரின் கைகளில் அகப்படாமல் போக்கு காட்டியபடி இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருந்தது. கடைசியாக, ஒரு புற்றுக்குள் போய் வராகம் ஒளிந்துக்கொண்டது. இது தெரியாத அரசர், “என்னடா இது, இத்தனை சிறிய வராகம் நமக்கு போக்கு காட்டுகிறதே.... இதை பிடிக்காமல் போனால் நமக்கு அவமானம் அல்லவா?... ”என்று எண்ணிய அரசர் மறுபடியும் அந்த வராகத்தைத் தேட துவங்கினார்.
தேடிக்கொண்டே போன சமயத்தில் மார்கண்டேய மகரிஷி ஒரு இடத்தில் தவம் செய்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அவரிடம் சென்ற சிபி சக்கரவர்த்தி, “சுவாமி, இந்த பக்கம் ஒரு வெள்ளை வராகம் சென்றதை பார்த்தீர்களா?” என்று கேட்டார்.
இவரை பார்த்ததும் மார்கண்டேய மகரிஷி “சிபி நீ வருவாய் என்று எனக்கு தெரியும் உனக்காக தான் நான் இங்கு காத்து இருக்கிறேன். இப்பாலை குன்றின் மேல் இருக்கும் புற்றுக்கு அபிஷேகம் செய் நீ தேடி வந்தது கிடைக்கும்” என்று கூறவும், சிபி சக்கரவர்த்தியும் மகரிஷி தந்த பாலால் குன்றின் மேல் இருந்த புற்றுக்கு அபிஷேகம் செய்யவும், புற்று மண் கரைந்து உள்ளிருக்கும் பெருமாள் புண்டரிகாட்சன் வெளியில் வந்ததாக புராணங்கள் கூறுகிறது.
தவறாமல் அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு முக்கியமான ஸ்தலம் திருவெள்ளாரை.