அட்சய திருதியையின் உண்மையான அர்த்தம் இதுதான்! - குசேலர், சங்கரர், பகீரதன் புராணக் கதைகள் சொல்வதென்ன?

ஏழை பெண் பிக்‌ஷை கேட்டு வந்த அக்குழந்தைக்கு ஏதாவது தரவேண்டும் என்று நினைத்தாள். ஆனால் வீட்டில் எதுவுமே இல்லை. அங்கு தேடி இங்கு தேடி கடைசியில் ஒரு நெல்லிக்கணியை கண்டாள்,
பகீரதன் புராணக் கதை
பகீரதன் புராணக் கதைPT
Published on

நாளை அட்சய திருதியை கொண்டாடப்பட இருக்கிறது. அதென்ன அட்சயதிருதியை.. நாம் நினைத்துக் கொண்டிருப்பதுதான் அர்த்தமா? அதன் சிறப்பம்சங்கள் என்ன?..

வசதியாக இருப்பவர்கள் வசதி இல்லாதவருக்கு உதவி செய்யும் தினம் தான் அட்சயதிருதியை. ஆனால், நாம் அர்த்தத்தை தவறுதலாக புரிந்துக்கொண்டு ஆபரணங்கள், ஆடைவகைகள் என்று அவரவர்களுக்கு வசதிக்கு தகுந்தமாதிரி வாங்கி குவித்து வருகிறோம்.

சரி, இந்தய அட்சயதிருதியையின் சிறப்பு என்னவென்று பார்க்கலாம்:

குசேலர் கதை:

கிருஷ்ணரின் லீலைகள் பலவகை உண்டு. அதில் முக்கியமானது குசேலரின் கதை... கடவுள் நினைத்தால் போதும் ஒருவனை ஒரு நொடியில் கோடீஸ்வரனாக்க இயலும் என்பதற்கு இக்கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

உஜ்ஜையி என்ற நகரத்தில் சாந்தீபனி என்ற முனிவர் ஆஸ்ரமத்தில் கிருஷ்ணன் பாலகனாக இருக்கும் சமயம் குருகுலக் கல்வி பயின்று வந்தார். அவருடன் சுதாமர் எனப்பெயர் கொண்ட குசேலரும் பயின்று வந்தார். குசேலர் வறுமையில் வாழ்ந்தவர் ஆகையால் அவருக்கு அதிகம் ஆசை என்பது இல்லை, புலனடக்கம் மிகுந்தவர். குருகுலக்கல்வி முடிந்ததும் மாணவர்கள் அவரவர் திசையில் பிரிந்து பயணித்தார்கள்.

சுதாமருக்கும் திருமணம் ஆனது. ஆனாலும் அவரின் வறுமையானது நீங்கவில்லை. அவரின் மனைவியோ அவரிடத்தில், “நீங்களும் நானும் வறுமையில் வாழலாம், நம்மால் இயலும். ஆனால் நம் குழந்தைகள்..? அவர்களுக்கு தினமும் நான் அமுது படைக்க வேண்டுமே.. நம்மிடம் அமுது படைக்க ஏதும் இல்லை. ஆகையால் உங்களின் பால்ய நண்பர் கிருஷ்ணர் நல்ல வசதியில் தானே இருக்கிறார். இதுவரை அவரிடம் நீங்கள் ஏதும் கேட்டதில்லையே.. ஆகையால் ஒருமுறை அவரிடம் சென்று, ஏதாவது தானியங்கள் தானமாக பெற்று வாருங்கள் ” என்றாள்.

இதைக்கேட்ட சுதாமருக்கு மிகவும் அவமானமாக இருந்தது. எனது நிலைமை யாருக்கும் வரக்கூடாது.. என நினைத்தவர் வேறு வழியில்லாமல் கிருஷ்ணரிடம் யாசகம் பெற்று வர நினைத்தார். அதே சமயம் நீண்ட நாள் நண்பனை வெறும் கையுடன் சென்று பார்க்க அவரின் மனதானது இசையவில்லை. ஆகவே ஒருபிடி அவலை மூட்டையாக கட்டிக்கொண்டு துவாரகை சென்றார். இவரின் வருகையை அறிந்துக்கொண்ட கிருஷ்ணர், தானே எதிர்கொண்டு நண்பனை வரவேற்றது மட்டும் அல்லாமல், அவரை ஆசனத்தில் அமர வைத்து சேவையும் புரிந்தார்.

கிருஷ்னரின் சேவையைக் கண்டு வெட்கி தலைகுனிந்த சுதாமர் கிருஷ்ணனிடம் யாசகம் கேட்டு பெற தயங்கி, கேட்காமல் இருந்தார். இதை புரிந்துக்கொண்ட கிருஷ்ணர், அவரின் தயக்கத்தை நீக்க.. “சுதாமர்... நீ வந்ததிலிருந்து நானும் பார்க்கிறேன்... எனது தங்கை எனக்கென்று கொடுத்தனுப்பியதை எனக்கு தராமல் அமைதியாகவே இருக்கிறாயே.. அதைக் கொடு என்று அவர் கொண்டு வந்த அவலை இரண்டு பிடி எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். இதை பார்ததும் சுதாமர், “ஆஹா... கிருஷ்ணருக்கு தான் என் மேல் எத்தனை ப்ரியம்.. ஆசையாய் நான் கொண்டு வந்த அவலை சாப்பிடுகிறாரே.. இவரிடம் போய் என் வறுமையை சொல்லுவதா?” என்று எண்ணியவர், ஏதேதோ பால்ய காலத்து கதைகளைப் பேசி விட்டு கேட்க வந்ததை கேட்காமலே விடைபெற்று சென்றார். ஆனால் கிருஷ்ணன் சுதாமர் கொண்டு வந்த அவலலை சாப்பிட்ட அந்த நொடியில் அவர் வீடானது வறுமை நீங்கி, செல்வம் பெருகியது. பிறகு, சுதாமரும் அவரது மனைவியும் மகிழ்சியுடன் வாழ்ந்தனர் என்று புராணத்தில் ஒரு கதை உண்டு. இந்நிகழ்வு நிகழ்ந்த தினம் அட்சயதிருதியை அன்று தான்.

அடுத்ததாக ஆதி சங்கரர் ஒரு ஏழை பெண்ணிற்காக கனகதாரா ஸ்தோஸ்திரத்தை அருளி அவரின் வறுமையை போக்கிய தினம்.

ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம்!!

ஆதிசங்கரர் கேரள மாநிலம் காலடியில் பிறந்தவர். சிறு வயதிலேயே துறவரம் மேற்கொண்டு விட்டார். ஆதலால் தினமும் யாசகம் பெற்று உண்டு இறைப்பணியைத் தொடர்ந்தார். ஒருசமயம் அவர் யாசகம் பெற ஒரு வீட்டின் முன் நின்று “பவதி பிக்‌ஷாந்தைஹி” என்று யாசகம் கேட்கவும், அவ்வீட்டில் இருந்த ஏழை பெண் யாசகம் கேட்டு வந்த அக்குழந்தைக்கு ஏதாவது தரவேண்டும் என்று நினைத்தாள். ஆனால், வீட்டில் எதுவுமே இல்லை. அங்கு தேடி இங்கு தேடி கடைசியில் ஒரு நெல்லிக்கணியை கண்டாள், அதை சங்கரருக்கு யாசகமாக போட்டதும், சங்கரருக்கு அவளின் வறுமை நிலைமை புரிந்தது. அவளின் மேல் இரக்கம் கொண்டு, அவளின் வறுமை நீங்க சங்கரர் அங்கேயே கனகதாரா ஸ்தோதிரத்தை பாடினார். அடுத்த நிமிடம், அங்கேயே சொர்ணம் பெருகி அவளின் வறுமை நீங்கியதாக புராணத்தில் உள்ளது. அவ்வாறு அவர் கனகதாரா இயற்றிய பாடலும் அட்சயதிருதியான இந்நாளில் தான் என்று புராணங்கள் கூறுகிறது.

பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த நாளும் அட்சய திருதி அன்று தான்.

பகீரதன் கதை

ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவர் சகரன். சகரன் ஒருமுறை யாகம் ஒன்றை நடத்தினார். அவரின் யாகத்தை தடுக்கும் பொருட்டு அவரின் யாகக் குதிரையை விரோதிகள் சிலர், கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் கட்டிவைத்தனர்.

குதிரையைத் தேடிப் புறப்பட்ட வீரர்கள், கபில முனிவரின் ஆஸ்ரமத்தில் குதிரை கட்டுண்டு இருப்பதைப் பார்த்தனர். கபில முனிவர் தான் குதிரையைக் கவர்ந்து வந்திருக்க வேண்டும் என்று கபிலரை தாக்கினர். கோபம் கொண்ட கபிலர் தனது பார்வையால் அனைவரையும் எரித்து சாம்பலாக்கினார். சரகனின் வம்சாவளியினர் சாம்பலான தனது முன்னோர்கள் நற்கதியை அடையவேண்டும் என்று ஏதேதோ யாகங்கள் யஞ்ஞங்கள் செய்தனர். ஆனால், சாம்பலான முன்னோர்களின் ஆத்மாவானது நற்கதியை அடையாமல் அலைந்துக் கொண்டிருந்தது.

சரகனின் வம்சத்தில் வந்தவன் தான் பகீரதன் இவன் தனது முன்னோர்களின் கதையை கேட்டறிந்து அவர்களுக்கு முக்தி தர நினைத்தான். ஆகாசத்தில் இருக்கும் கங்கையினால் தன் முன்னோர்கள் முக்தி அடைவார்கள் என்று எண்ணிய அவன் கங்கையை நோக்கி கடும் தவம் புரிந்தான். கங்கையும் பூமிக்கு வர சம்மதித்தாள். ஆனால், அவள் பியாகமானது அதிவேகமாக இருந்ததால் அவளின் வேகத்தை தணிப்பதற்காக சிவபெருமானிடம் வேண்டினான். சிவபெருமானும் பாகீரதனின் வேண்டுகோளுக்கு மனமிறங்கி கங்கையை தனது தலையில் தாங்கி அவளின் வேகத்தை தணித்தார். பூமிக்கு வந்த கங்கையில் தனது பிருதுர்களுக்கு காரியங்கள் செய்து அவர்களை மோட்சத்திற்கு அனுப்பினான். ஆகையால் கங்கைக்கு பாகீரதி என்ற பெயரும் உண்டு. என்று புராணங்கள் கூறுகிறது.

ஆக அட்சயதிருதி அன்றைய நல்லநாளில் தங்களால் இயன்றதை, பொன்னோ பொருளோ அல்லது உணவோ... ஏதோ ஒன்றை நாம் இல்லாதவர்களுக்கு தானமாக தந்து, குசேலரைப்போல் வாழலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com