கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவில்தான் தசரா பண்டிகைக்குப் பிரசித்தி பெற்றது.
இங்கு ஆண்டுதோறும் பத்து நாட்கள் தசரா பண்டிகை வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த அக்டோபர் 15 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 9 நாட்களாகத் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். 10வது நாளான நேற்று திருவிழாவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்குத் தமிழகம் முழுவதிலும் இருந்து காப்புக் கட்டி விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தும் விதமாகக் காளி, அனுமன், கிருஷ்ணர், ராமர், குரங்கு, கரடி, சிங்கம், முருகன், விநாயகர், பிச்சைக்காரர், காவலர் போன்ற பல்வேறு வேடங்களை அணிந்திருந்தனர். பக்தர்கள் அனைவரும் ஒவ்வொரு ஊரிலும் தசரா குழு அமைத்து தாரை, தப்பட்டை மேளம் முழங்கப் பொதுமக்களிடம் பிச்சையாக எடுத்து வந்த காணிக்கைகளை அம்மன் உண்டியலில் போட்டு முத்தாரம்மனை வழிபட்டனர்.
இதனைத்தொடர்ந்து முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவில் முன்பாக எழுந்தருளினார். கடற்கரை மைதானத்தில் மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி, கோலாகலமாக நடைபெற்றது. முதலில் தன் முகமாக வரும் மகிஷாசூரனை 12 மணிக்கு வதம் செய்த முத்தாரம்மன், அடுத்ததாக 12:08 மணிக்கு யானை முகத்துடனும், 12:15 மணிக்கு எருது முகத்துடனும் அடுத்து 12:24 மணிக்குச் சேவல் உருவில் வந்த மகிஷாசூரனையும் வதம் செய்தார். அப்போது "ஓம் காளி ஜெய் காளி" என்று பக்தர்கள் விண்ணை முழங்கக் கோஷமிட்டனர். பின்னர் முத்தாரம்மனுக்குப் பாலாபிஷேகம் நடைபெற்றது.
இந்தநிகழ்ச்சியில் 3,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இங்கு வந்த பக்தர்கள் அனைவரும் இன்று மாலை காப்பு கழற்றிய பின் அவர்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.