மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களின் 12 வருட வனவாசம் முடியும் தருவாயில் இருந்தபோது, பாண்டவர்கள் மேல் மீண்டும் பழியை உண்டு பண்ணி அவர்களை மீண்டும் வனவாசம் அனுப்ப வேண்டும் என நினைத்தான் துரியோதனன். அதற்காக பல வழிகளை கையாண்டான். இருந்தாலும் அவனால் தான் நினைத்ததை நடத்த முடியவில்லை. இறுதியில் அவர்களை அழிக்க எண்ணம் கொண்டு, ஒரு யாகத்தை வளர்த்தான். அதிலிருந்து ஒரு பூதம் உருவானது. அந்த பூதத்திற்கு கிருத்யை என்று பெயர்.
துரியோதனன் அந்த பூதத்திடம், “ஏய் பூதமே... தர்மபுத்திரர் த்வைத்த (Dvaita) வனம் காட்டில் அவரது தம்பிகளோடு இருப்பார். அவர்களை அழித்து வா.. தம்பிகள் உயிர் துறந்தால் தர்மபுத்திரரும் உயிரை விடுவார்” என கட்டளையிட்டான். பூதமும் அவர்களை அழிக்க புறப்பட்டது. இந்த செய்தி கண்ணனுக்கு தெரியவந்தது. பாண்டவர்களை காப்பாற்ற நினைத்த கண்ணன், அதற்காக ஒரு உபாயம் செய்தார். அது என்னவென இறுதியில் பார்ப்போம்.
இதற்கிடையே காட்டில் பஞ்சபாண்டவர்கள் அமர்ந்திருந்த சமயம் ஒருவர் தர்மரிடம் வந்து, “நான் யாகம் செய்வதற்காக வைத்திருந்த அரணிக்கட்டை ஒரு மானின் கொம்பில் சிக்கிகொண்டு மானுடன் சென்று விட்டது. என்னால் அந்த மானை பிடிக்க முடியவில்லை. எனக்கு அந்த அரணிகட்டை தேவை. ஆகையால் நீங்கள் தான் எனக்கு அந்த அரணிகட்டையை திரும்ப எடுத்து தர வேண்டும்” என்று கேட்டார்.
பாண்டவர்களும், சரி என்று கூறி மானை பிடிக்க ஓடினர். ஆனால் மானானது அவர்களின் கைகளில் அகப்படாமல் போக்கு காட்டி ஓடியது. இதனால் பாண்டவர்கள் ஐவரும் மிகவும் களைத்து விட்டனர். நா வரண்டு அவர்களுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அச்சமயம் நகுலன் அருகில் இருந்த மரத்தில் ஏறி அருகில் தடாகம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான். கொஞ்சம் தள்ளி நீர் நிறைந்த தடாகம் ஒன்று இருப்பதை பார்த்த நகுலன், “அண்ணா அருகில் தடாகம் ஒன்று இருக்கிறது. அதில் நான் தண்ணீர் அருந்திவிட்டு உங்களுக்கும் தண்ணீர் எடுத்து வருகிறேன்” என்று கூறி சென்றான். அப்போது அங்கு ஒரு அசரீரி கேட்டது, “நகுலா... நான் யக்சன். இந்த தடாகம் எனக்கு சொந்தம். ஆகையால் நான் கேட்கும் சில கேள்விகளுக்கு நீ பதில் கூறிவிட்டு தண்ணீரை அருந்து. இல்லையென்றால் நீ உயிரை விடுவாய்” என்றது.
அதற்கு நகுலன் “தண்ணீர் பொதுவானது. யாரும் உரிமை கொண்டாடமுடியாது. ஆகையால் உன் அனுமதி எனக்கு தேவையில்லை” என்று கூறி தண்ணீரை அருந்த முற்பட்டான். அச்சமயம், அவன் உயிரை இழந்து கீழே விழுந்தான்.
நகுலனை தேடிக்கொண்டு சகாதேவன் வந்தான். அவனுக்கும் அதே நிலை ஏற்பட்டது. அடுத்து அர்ஜூனன் வந்தான். அவனுக்கும் அதே நிலை. அடுத்து பீமன். இப்படி போனவர்கள் நால்வரும் இறந்து விழுந்தனர். அவர்களை காணாததால் கவலையுடன் தர்மர் தன் தம்பிகளை தேடி அங்கு வந்தார்.
அந்நேரத்தில் துரியோதனன் ஏவிய க்ருத்தியை பூதம் அங்கு வந்தது. தம்பிகள் அனைவரும் இறந்து கிடக்க, தர்மர் தனது தம்பிகளை தேடி வருவதை பார்த்தது பூதம். உடனே பூதமானது, “யாரை அழிக்கவேண்டும் என்று நான் இங்கு வந்தேனோ அவர்களே ப்ரேதமாக இருக்கிறார்கள். ஆகையால் இங்கு எனக்கு இனி வேலை இல்லை” என்றுக் கூறி அங்கிருந்து திரும்பிச் சென்றது.
அதேநேரம் தர்மர் தன் சகோதரர் இறந்த துக்கத்தில் இருந்தார். அச்சமயம் மீண்டும் அங்கு அந்த அசரீரி கேட்டது. அதற்கு பதிலளித்த தர்மபுத்திரர், தனது சகோதர்களை உயிருடன் மீட்டு சென்றார் என்று மகாபாரத புராணத்தில் ஒரு கதை உண்டு.
இதில் பாண்டவர்களின் உயிரை பூதமானது பறித்துவிடக்கூடாது என்பதற்காக கண்ணனே தர்மதேவதையிடம் யக்சனாக வந்து பஞ்சபாண்டவர்களை காப்பாற்றும்படி கூறியதாக, புராணத்தில் உள்ளது என்று வேளுக்குடி கிருஷ்ணன் ஒரு உபன்யாசத்தில் கூறி இருக்கிறார்.