”தற்பெருமை தற்கொலைக்கு சமம்” : அர்ஜுனன் - தர்மன் இடையே நடந்த களேபரமும், கிருஷ்ணர் சொன்ன உபதேசம்!

“அர்ஜூனா என்ன காரியம் செய்கிறாய்? உன் சகோதரனை நீ கொல்லதுணிந்துவிட்டாயா?” என்றார்.
கிருஷ்ணரின் உபதேசம்
கிருஷ்ணரின் உபதேசம்PT
Published on

மகாபாரதத்தில் அர்ஜூனன் அவனது வில்லான காண்டீபத்தின் மேல் மிகுந்த காதல் கொண்டிருந்தான். அதை தன் உயிருக்கும் மேலாக மதித்தான். யாராவது அவனது காண்டீபத்தை பற்றி தவறாக பேசினாலோ அல்லது அவமரியாதை செய்தாலோ, அவர்களை கொன்று விடுவதென்று, சபதம் மேற்கொண்டிருந்தான்.

ஒருமுறை அர்ஜூனனின் தமயனாகிய தர்மர், “அர்ஜூனா.... எனக்கு உன்னிடம் இருக்கும் காண்டீபத்தின் மீது நம்பிக்கை இல்லை. உன் காண்டீபமானது உனது கட்டளையை ஏற்குமா? என்பது எனக்கு சந்தேகமே.. ” என்று அந்த காண்டீபத்தை தரக்குறைவாக பேசி விட்டான்.

அர்ஜூனனுக்கு கோபம் வந்தது. பேசியது தனது சகோதரன் என்றாலும் தனக்கு விருப்பமான காண்டீபத்தை யார் தரக்குறைவாக பேசினாலும், அவர்களை கொல்வது என்று அவன் சபதம் எடுத்திருந்ததால் தனது சகோதரனை கொல்வதற்காக வில்லை நாணில் கோர்த்த சமயத்தில் கிருஷ்ணர் அவனை தடுத்தார்.

“அர்ஜூனா என்ன காரியம் செய்கிறாய்? உன் சகோதரனை நீ கொல்ல துணிந்துவிட்டாயா?” என்றார்.

“கிருஷ்ணா.. எனது காண்டீபத்தை யார் குறை சொன்னாலும் அவர்களை கொல்வது என்று சபதம் மேற்கொண்டு இருக்கிறேன். ஆகவே நான் யுதிஷ்டிரரை (தர்மர்) கொன்று தான் ஆகவேண்டும்”.

“அர்ஜூனா, நீ உன் தமயனை கொன்றாக வேண்டும். அவ்வளவு தானே.. அதற்கு நான் ஒரு உபாயம் சொல்கிறேன் கேள். உனது சகோதரரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிவிடு. அப்படி திட்டுவதால் நீ அவரை கொன்றதற்கு சமம்” என்றார்.

ஆகவே.. அர்ஜூனன் தனது தமயனை தரக்குறைவான வார்த்தைகளால் கண்டபடி திட்டினான். பிறகு அதற்காக மனம் வருந்தி “கிருஷ்ணா.. எனது பாசத்திற்குரிய தமயனை என் கடும் சொற்களால் கண்டபடி திட்டிவிட்டேன். இனி நான் உயிருடன் இருக்கலாகாது இப்பொழுதே தீயில் இறங்கி என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன்” என்று, தன் உயிரை விடுவதற்கு தயாரானான்.

“அர்ஜூனா.. மறுபடியும் நீ தவறான முடிவையே மேற்கொள்ள எண்ணுகிறாய். உங்களில் யார் ஒருவர் குறைந்தாலும் அல்லது உங்களில் ஒற்றுமை குறைந்தாலும் அது கௌரவர்களுக்கு பலமானதாக மாறிவிடும். ஆகவே யோசித்து முடிவெடு” என்றார்.

“ என் உயிருக்குரியான தமயனை தகாத வார்த்தைகளால் திட்டிய நான் எப்படி உயிருடன் இருக்கமுடியும்? இது என் மீதான ஏற்பட்டிருக்கும் அழுக்கல்லவா?”

“ இதற்கும் ஒரு உபாயம் உண்டு அர்ஜூனா.. நீ உன் பெருமைகளைப்பற்றி புகழ்ந்து பேசு.. ஆணவம் கொள். உன் ஆணவம், உன் தற்பெருமைகளை நீயே வியந்து பேசிக்கொள்வது நீ தற்கொலை செய்துக்கொள்வதற்கு சமம் .” என்றார்.

அவ்வாறு அர்ஜூனனும் அவனுடைய பெருமைகளை அவனே புகழ்ந்து தற்பெருமை பேசிக்கொண்டான். பிறகு யுதிஷ்டிரரும், அர்ஜூனனும் ஒற்றுமையாக இருந்தனர்.

அர்ஜூனனுக்கு கிருஷ்ணன் கூறிய இந்த வார்த்தைகளானது உண்மையில் நமக்கானது ஆகும். நம் பெருமைகளை நாமே பேசிக்கொண்டு, புகழ்ந்துக்கொண்டு இருந்தோம் என்றால் நாம் தற்கொலை செய்துக்கொண்டதற்கு சமம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com