’உன் எச்சில் சிவபெருமானின் மீது விழுந்திருக்கும்’ - பக்தியால் மனைவி மீது கோபம் கொண்ட திருநீலநக்கர்!

ஒருநாள் அவயந்தி நாதருக்கு திருநீலநக்க நாயனார் அபிஷேக ஆராதனை செய்த சமயத்தில் சிலந்தி ஒன்று தடுமாறி சிவபெருமான் மீது விழுந்தது. அதை திருநீலநக்க நாயனாரின் மனைவி தனது வாயால் ஊதி அப்புறப்படுத்தினாள்.
சிவபெருமான்
சிவபெருமான்PT
Published on

சோழ நாட்டில் சாத்த மங்கை என்ற ஒரு ஊர் இருந்தது. அங்கு தீவிர சிவபக்தராக இருந்தவர் தான் திருநீலநக்க நாயனார். இவர் சிவபக்தியிலும், அடியவர் பக்தியிலும் சிறந்து விளங்கியவர்.  அந்த ஊரில் சிவபெருமான் அவயந்தி நாதராக வீற்றிருந்தார். தவறாமல் கணவன் மனைவி இருவரும் நாள்தோறும் அவயந்தி நாதரை வணங்கி வந்தனர்.

ஒருநாள் அவயந்தி நாதருக்கு திருநீலநக்க நாயனார் அபிஷேக ஆராதனை செய்த சமயத்தில் சிலந்தி ஒன்று தடுமாறி சிவபெருமான் மீது விழுந்தது. அதை திருநீலநக்க நாயனாரின் மனைவி தனது வாயால் ஊதி அப்புறப்படுத்தினாள். இதைக்கண்ட திருநீலநக்க நாயனார் தனது மனைவியை கோவித்துக்கொண்டார்.

“நீ சிலந்தியை கையால் தள்ளி அப்புறப்படுத்தி இருக்க வேண்டும் மாறாக உனது வாயினால் அதை ஊதி தள்ளினாய். இது பெரும் அபச்சாரம். உனது எச்சில் சிவபெருமான் மீது விழுந்து இருக்கும் . இதனால் நீ என்னை அவமதித்து விட்டாய். இனி நீ என்னுடன் பேசாதே… என்னுடன் சேராதே என்று கூறி மனைவியை அங்கேயே விட்டுவிட்டு தான் மட்டும் வீட்டிற்கு சென்றுவிட்டார். கணவருக்கு பயந்த மனைவி ஆலயத்திலேயே தங்கி விட்டார்.

மனதில் துயரத்துடன் நாயனார் இரவு அவரது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சமயம், சிவபெருமான் அவரது கனவில் தோன்றினார். “ அடியவரே… என்னைப்பார், உனது மனைவி வாயால் ஊதிய இடத்தில் மட்டும் எந்த பாதிப்பும் இல்லை. மற்ற இடங்களில்  எல்லாம் கொப்புளங்கள் தோன்றியுள்ளன. உனது மனைவி எனக்கு நல்லது தான் செய்தாள். நீ அவர் மீது எதற்காக கோபம் கொண்டீர் என்று கூறி, கோயிலிலுள்ள சிவலிங்கத்தை தோன்றச்செய்தார். திடுக்கிட்டு எழுந்த நாயனார், ஆலயத்திற்கு சென்று, தனது மனைவியை அழைத்து வந்தார். மீண்டும் இருவரும் வழக்கம் போல் தனது பணியை செவ்வனேயே செய்து வந்தனர்.

ஒருமுறை திருஞான சம்பந்தப்பெருமானின்பெருமையை கேட்டறிந்த நீலநக்க நாயனார், அவரை தரிசிக்க எண்ணினார். அந்நாளும் விரைந்து வந்தது. அயவந்தி நாதரை தொழுவதற்காக சாத்தமங்கைக்கு திருஞான சம்பந்தர் வந்தார். அதைக்கேள்விப்பட்ட நீலநக்கர், அவரை வரவேற்று அவருக்கு அமுதுபடைத்து உபசரித்தார். நீல நக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க சில நாட்கள்  திருஞான சம்பந்தர் நீலநக்க நாயனாரின் இல்லத்தில் தங்கியிருந்தார். நீலநக்கரும் திருஞான சம்பந்தருக்கு பணிவிடை செய்து அவரது அன்பை பெற்றார்.

சிவபெருமான்
திருநீலகண்ட நாயனாரை அவர் மனைவியுடன் சேர்த்துவைக்க சிவபெருமான் செய்த செயல்!

மறுபடி ஞான சம்பந்தர் பல திருத்தலங்களை வழிப்பாடு செய்வதற்காக புறப்பட்டார்.  ஆனால், நீல நக்கருக்கு சம்பந்தரை பிரிய மனமில்லாத்தால், அவருடன் செல்ல விரும்பினார். ஆனால் ஞான சம்பந்தர் அவரை தடுத்து அயவந்தி நாதருக்கு தொடர்ந்து பணிவிடை செய்யுமாறு அறிவுருத்தவே, நீலநக்கரும் திருஞான சம்பந்தரின் வாக்கை மீறாது, சாத்தமங்கலத்திலேயே தங்கி அயவந்தி நாதருக்கு தொண்டு புரிந்து, நீலநக்க நாயனாரும் அவரது மனைவியும் சிவபதம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com