ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது, கொடிமரம் முன்பு ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆழ்வார்களில் பெரியாழ்வாரும், ஆண்டாளும் அவதரித்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். பூமாதேவியின் அவதாரமான ஆண்டாள், ஆடிமாதம் பூரநட்சத்திரத்திரம் அன்று துளசி செடியின் அடியில் குழந்தையாக அவதரித்திருந்தாராம்.
அப்போது குழந்தையைப் பார்த்த பெரியாழ்வாருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதாகவும், அக்குழந்தைக்கு ஆண்டாள் என்று பெயரிட்டு தன் மகளாகவே வளர்த்து வந்தார்.
ஆண்டாளுக்கு சிறு வயது முதல் பெருமாளிடத்தில் மிகுந்த பக்தி உண்டு. இதனால் அவர் ஸ்ரீரங்கநாதரை திருமணம் செய்து கொள்ள நினைத்தார். அதன்படியே ஸ்ரீரங்கத்திலேயே பெருமாளுடன் கலந்துவிட்டார் ஆண்டாள் என புராணங்கள் கூறுகின்றன.
திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்று இரண்டு பிரபந்தங்களை ஆண்டாள் பாடியுள்ளார்.
திருமுக்குளம் என்ற குளத்தில் ஆண்டாள் நீராட உத்ஸவம் நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூர் தேரும்கூட, மிகவும் பிரசித்தி பெற்றது.