எதுவும் இல்லை என்று கவலைப்படுவதை விட இல்லை என்று மகிழ்ச்சி கொண்டால் வாழ்க்கை பிரகாசமானதாக இருக்கும் என்பதற்கு இக்கதை ஒரு சான்று.
இக்கதையானது பாகவதத்தில் சனகாதி முனிவர்கள் நாரதருக்கு சொல்லப்பட்ட கதை.
“முன்பொரு காலத்தில் துங்கபத்ரா நதி கரையில் ஒரு அழகிய நகரம் ஒன்று இருந்தது. அந்நகரில், ஆத்மதேவன், துந்துளி என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு, குழந்தை பாக்கியம் இல்லாததால் ஆத்மதேவன் மிகவும் கவலைப்பட்டார். குழந்தை பாக்கியத்தை பெருவதற்காக பல தானங்களையும் தருமங்களையும் வேள்விகள், யாகங்கள் பலவற்றையும் செய்து விரதங்கள் பலவும் செய்த பிறகும் கூட குழந்தை பாக்கியம் கிடைக்காததால், மனமுடைந்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டி காட்டை சென்றடைந்தார்.
இவர் காட்டை அடைந்த சமயத்தில் அங்கு தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முனிவர் ஒருவர் ஆத்ம தேவனின் கவலையை தெரிந்து கொண்டார்.
பின்னர் அவர், “ஆத்மதேவரே உங்களின் விதி படி இந்த ஜன்மம் மட்டும் அல்லாமல் உங்களுக்கு வரக்கூடிய ஏழேழு ஜன்மத்திலும் உங்களுக்கு குழந்தை பாக்கியம் என்பதே கிடையாது. இதை கவலையாக கருதாமல், உங்கள் பாக்கியமாக கருதுங்கள். ஏனெனில் குழந்தைகளினால் நமக்கு கவலைகள் தான் அதிகரிக்கும் சம்சார வாழ்கையிலிருந்து நம்மால் விடுபட முடியாது. அதில் செய்கின்ற பாவ புண்ணியங்களின் விளைவால் அடுத்தடுத்த பிறவிகள் தோன்றக்கூடும். ஆகவே, பகவானிடம் பக்தியை செலுத்தி மோட்சத்திற்கு செல்ல முயலுங்கள். பந்தங்களின் பலனால் பகவானை அடையும் நோக்கமானது மழுங்கடிக்கப்படும். அதனால் நீங்கள் உங்களின் எண்ணத்தை மாற்றிக்கொண்டு திரும்பி சென்று விடுங்கள்” என்று உபதேசம் செய்தார்.
ஆனால் ஆத்மதேவன் இந்த உபதேசத்தை ஏற்க மறுத்து பிடிவாதமாய் தன் உயிரை மாய்த்து கொள்ள முயன்றார்.
முனிவருக்குக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. பின்னர் ஆத்மதேவனின் நிலையை கண்டு மனமிறங்கி தனது தவத்தின் பலனாக பழம் ஒன்றை ஆசிர்வதித்து அதை ஆத்மதேவனின் கையில் கொடுத்து “இதை உன் மனைவியிடம் கொடுத்து உண்ணச்சொல் . உன் ஆசைபடி அழகான மகன் பிறப்பான். அக்குழந்தை வேதத்திலும் யோகத்திலும் சிறந்தவனாக இருப்பான்” என்று அப்பழத்தை ஆத்மதேவரிடத்தில் தந்தார்.
மகிழ்ச்சியுடன் இல்லம் வந்த ஆத்மதேவர் தன் மனைவி துந்துளீயிடம் அப்பழத்தை தந்து உட்கொள்ள சொல்லி கொடுத்தார்.
ஆனால், துந்துளிக்கு குழந்தை பெற்றெடுக்கும் எண்ணம் சிறிதும் இல்லை. குழந்தை பேற்றினால் வரும் துன்பத்தையும், உடல் மாற்றத்தையும் குறித்து கவலை பட்டவள் , இச்செய்தியை தன் சகோதரியிடம், கூறி மனவேதனை அடைந்தாள். அதே சமயம் துந்துளியின் சகோதரி கர்ப்பம் தரித்திருந்தாள்.
அவள் தங்கை துந்துளியிடம்.."அக்கா... நீங்கள் கவலையை விடுங்கள். இன்றிலிருந்து பத்தாவது மாதம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விடும். அக்குழந்தையினை நான் உங்களிடம் தந்துவிடுகிறேன். அதை உங்கள் கணவரிடம் உங்களுக்கு பிறந்தது என்று சொல்லிவிடுங்கள் அதுவரை தாங்களும் கருத்தரித்தது போல் நாடகமாடுங்கள். இதற்கு கைமாறாக தாங்களும் எனக்கு தங்களின் ஆபரணங்களையும் செல்வத்தையும் தந்து உதவிசெய்யுங்கள்" என்று கூறினாள்.
துந்துளியும் தங்கையின் இந்த பேச்சினால் மனம் மகிழ்ந்து தங்கையுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டாள். இருவரும் செல்வங்களை மாற்றிகொள்ள விருப்பப்பட்டனர்.
அதனால் துந்துளி, முனிவர் ஆசிர்வதித்து கொடுத்த அப்பழத்தை தன்வீட்டில் இருந்த பசுவிற்கு கொடுத்து விட்டாள். பசுவும் அப்பழத்தினை சாப்பிட்டு விட்டது. இது ஏதும் தெரியாத ஆத்ம தேவர் தனக்கு மகன் பிறக்கப்போகிறான் என்ற மகிழ்ச்சியில் இருந்தார். பத்தாவது மாதத்தின் முடிவில் பழத்தை சாப்பிட்ட பசு ஓர் அழகான ஆண் குழந்தையை ஈன்றது. அக்குழந்தை மிகவும் அழகாக அகன்று விரிந்த, கண்களையும் மாட்டினை ஒத்த காதினையும் பெற்றிருந்தது. கைகள் இரண்டும் கூப்பி பகவானை தியானித்தபடி ஞானத்துடன் பிறந்தது.
அதே சமயத்தில் துந்துளியின் தங்கையும் ஓர் ஆண் மகனை பெற்றெடுத்தாள். தமக்கையர் செய்து கொண்ட ஒப்பந்தபடி தங்களின் செல்வங்களை இருவரும் மாற்றிக்கொண்டனர்.
துந்துளியும் அக்குழந்தைக்கு துந்துகாரி என்று பெயரிட்டாள், பசுவிற்கு பிறந்த குழந்தைக்கு கோக்கர்ணன் ( கோ - பசு கர்ணண் - காது) என பெயரிட்டனர் இரு குழந்தைகளும் ஆத்மதேவர் வீட்டில் வளர்ந்தன.
ரிஷியின்ஆசிர்வாதத்தால் பிறந்த கோகர்ணன் ஞானத்திலும் புத்தியிலும் சிறந்து விளங்கினான். சிறுவயதிலேயே ஞானமார்க்கத்தில் ஈடுபட்டு இறைவனை அடையும் நோக்குடன் தவ வாழ்க்கையை மேற்கொண்டான்.
துந்துளியிடம் வளர்ந்த துந்துகாரி மிகவும் மோசவனாக கெட்டவழியை பின்பற்றினான். தாய் தந்தையை மதிக்காமலும் அவர்களை துன்புறுத்தியும் வந்தான்.
ஆத்மதேவனும் தன் குழந்தை பற்றிய ரகசியம் ஏதும் தெரியாததால் துந்துகாரி தனது மகனே என்ற எண்ணம் கொண்டிருந்தார். அவனின் தீய நடவடிக்கைகளினால் மனம் நொந்து மிகவும் வேதனை அடைந்தார். செல்லமாய் வளர்க்கப்பட்ட துந்துகாரி தந்தையின் உபதேசங்களை ஏற்க மறுத்து மாறாக தாய் தந்தையரை அடித்து துன்புறுத்தினான். மேலும், அவன் தன் வாழ்க்கையை உல்லாசமாக இருக்கவேண்டி தகாத பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டான். அப்பெண்களின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு வீட்டில் இருந்த பொருட்களை விற்றும் அண்டை வீட்டார் உடமைகளை அபகரித்தும் வந்தான். ஒரு சமயத்தில் இவனை நினைத்து தாய் துந்துளியே கவலைப்பட ஆரம்பித்தவள், இவனிடத்தில் அறிவுறை கூறினாள். அதை ஏற்க மறுத்ததுடன் கோவம் கொண்டு தாய் துந்துளியை கிணற்றில் தள்ளி கொன்றும் விட்டான்.
ஆத்ம தேவனும் பெற்றபிள்ளையே என் துக்கம் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறானே. இவனின் இத்தகைய செயலானது என் இறப்பிற்கும் காரணமாகபோகிறது என்று நினைத்தவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்து காட்டை நோக்கி நடந்து சென்றார். வழியில் கோக்கர்ணனின் இருப்பிடம் வந்தார்.
தந்தையின் துக்கத்தை நினைத்த கோகர்ணன் அவருக்கு உபதேசம் செய்தான்.
"தந்தையே, உலகம் துன்பத்தின் இருப்பிடம். மயக்கத்தை தருவது. பிள்ளைகளோ சொத்தோ உண்மையில் நமக்கு எதுவும் சொந்தமில்லை. எவன் உலகப்பொருள்கள் மீதும் பந்தங்கள் மீதும் ஆசை வைத்திருக்கிறானோ அவன் இரவும் பகலும் துன்பத்தை அடைகிறான்.
உண்மையான ஆனந்தம் தேவர்களின் தலைவன் இந்திரனுக்கோ நாட்டை ஆளும் சக்கரவர்த்திக்கோ இருப்பதில்லை. எவன் இந்திரிய சுகங்களில் (உலக ஆசையில்) வெறுப்புற்று தனிமையில் தன்னை தானே உணர்ந்து வெற்றி பெருகிறானோ அவனே உண்மையில் ஆனந்தம் அடைகிறான். தந்தையே, துந்துகாரி , "உன் பிள்ளை" என்கிற அறியாமையை தூக்கி எறி.
உலக மயக்கத்தால் நரகம் தான் கிடைக்கும். அதனால் இந்த பற்றுகளை நீக்கி கானகம் செல்லுங்கள்" என்று தந்தைக்கு உபதேசம் செய்தான்.
ஆத்மதேவர் தெளிவுற்று, "நான் பந்தம் என்னும் பாழும் கிணற்றில் முடவனை போல் விழுந்து கிடக்கிறேன். இதிலிருந்து கரையேற நான் என்ன செய்யவேண்டும்" என்று கேட்டார்.
"மனைவி, மக்கள் எனது என்ற எண்ணத்தை கை விடவேண்டும். இந்த உலகம் நிலையில்லாதது.
மாறிக்கொண்டே இருப்பது என்ற உண்மையை எப்பொழுதும் நினைவில் நிறுத்துங்கள். இறைவனின் மேல் பக்தி கொண்டு அதன் ருசியை உணர்ந்து சதாசர்வ காலமும் தெய்வத்தை யாசிக்க வேண்டும். இவ்வாறான பக்தியினால் உலகம் உங்களை விடுவிக்கும் உலக கடமைகளிலிருந்து விடுதலை அடைவீர்கள்” என்று தந்தைக்கு கோகர்ணன் உபதேசம் செய்தான்.
ஆத்மதேவரும் உபதேசத்தை கேட்டு தெளிவு பெற்று கானகம் சென்று தியானத்தில் ஈடுபட்டு முக்தியும் அடைந்தார்.
துந்துகாரி மிகவும் மோசவனாக வளர்ந்து தீயசெயல்களை செய்து மோசமான பெண்களுடன் தகாத உறவினை வைத்துக்கொண்டு அவர்களின் விருப்பங்களை பூர்த்திசெய்வதற்காக. இராஜாங்கத்தின் சொத்துக்களையும் அபகரித்தான்.
துந்துகாரியின் நிலையை உணர்ந்து, அவனை சூழ்ந்த பெண்கள் பொருள்களை எடுத்துக்கொண்டு துந்துகாரியினால் தங்களுக்கு ஆபத்து வந்து விட கூடாது என்பதற்காக அவனை கொல்ல துணிந்தனர். எரிகின்ற கொள்ளீ கட்டையினை கொண்டு அவன் முகத்தையும் உடம்பையும் எரித்து ஆழமான குழியினை தோண்டி அவனை உள்ளே தள்ளி மூடினர். துந்துகாரி துர்மரணத்தை அடைந்தான். அதனால் அவனது ஆத்மா சாந்தி அடையாமல் தினம் வெப்பம், குளிர் என்று பாராமல் காற்றுருவில் பசி தாகத்துடன் அலைந்து திரிந்தான்.
இதை தெரிந்துகொண்ட கோகர்ணன் காயாவிற்கு சென்று அவனது ஆத்மா சாந்தி அடைய முறைபடி சிரார்த்தம் செய்தான். இருப்பினும் துந்துகாரியின் ஆத்மாவானது சாந்தி அடையாமல் பிரேத உருவில் கோகர்ணன் முன் வந்தான்..
"கோகர்ணா நான் துந்துகாரி.. பிரேத ஜன்மத்தை அடைந்து துன்பத்தில் உழல்கிறேன். காற்றை மட்டுமே உண்டு வாழ்கிறேன்.. நீ கருணை கடல், என் சகோதரன் இந்நிலையிலிருந்து நீ என்னை காப்பாற்று" என்று வேண்டிக்கொண்டான்.
கோகர்ணனும் "நான் உனது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக, கயா சென்று சிரார்த்தம் செய்தேன். அதனால் கூட உனக்கு முக்தி கிடைக்கவில்லை என்றால் எனக்கு வேறு உபாயம் தெரியவில்லை" என்று கூறி தன் தவ வலிமையால் சூரிய பகவானிடம் வேண்டினான். சூரியபகவானும் " துந்துகாரியின் இந்நிலை மாற கோகர்ணனை ஏழு நாட்கள் விடாமல் பாகவதபுராணத்தை பாராயணம் செய்யவும் அதை துந்துகாரி கேட்க வைக்க வேண்டும்." எனவும் கூறினார்.
நனைந்து ஈரமானது, உலர்ந்தது, பெரியது, சிறியது என்கிற பாகுபாடின்றி, அனைத்துக் கட்டைகளையும் தீயானது எரித்து விடுவது போல், பாகவதத்தை ஏழு நாட்களில் கேட்பது என்பதும், மனம், வாக்கு, உடல் ஆகிய முக்கரணங்களிலும் செய்த பாவங்கள் முன் செய்த பாவினை இனிச்செய்யும் வினைகள் , பெருத்த சிறுத்த பாவங்கள் என்ற வேறுபாடின்றி அனைத்து பாவங்களையும் எரித்து சாம்பலாக்கி விடும்.
சூரிய பகவான் ஆணைப்படி கோகர்ணன் பாகவதத்தை சப்தாகம் (7 நாட்கள்) செய்தான். கோகர்ணனுக்கு அருகில் ஏழு துவாரம் உள்ள மூங்கில் ஒன்றினை வைத்து அதில் பிரேத உருவில் இருந்த துந்துகாரியை அதில் இருக்கச் செய்து பாகவத சப்தாகத்தை கேட்கும் படி செய்தான். சப்தாகம் ஆரம்பித்தவுடன் அதனை கேட்க அவ்வூரில் உள்ள அனைத்து மக்களும் கூடினர்.
ஒவ்வொரு நாள் சப்தாகம் முடியவும் ஆவாகனம் செய்யப்பட்ட மூங்கிலின் ஒவ்வொரு துவாரங்கள் வெடித்து சிதறியது. ஏழு நாட்கள் சப்தாக முடிவில் ஏழு துவாரங்களும் விடுபட்டு துந்துகாரியின் பிரேத உடம்பு வெளியேறிய சமயத்தில், அப்பிரேதத்தை பரமபதம் கொண்டு செல்வதற்காக தேவர்கள் அவ்விடத்திற்கு புஷ்பக விமானத்துடன் வந்தனர். அதனை கண்ட கோகர்ணனுக்கும் கூடி இருந்தவர்களுக்கும் ஆச்சர்யப்பட்டனர். "கொடியவனான இவனுக்கா பரமபதம்?" என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். அதை அறிந்த தேவர்களும் "துந்துகாரி எத்தகைய கொடிய பாவத்தை செய்து இருந்தாலும் அவன் ஏழு நாட்களும் பாகவதத்தை கேட்டதன் பயனாக அவன் பாவங்களிலிருந்து விடுபட்டு சொர்கத்தை அடைய தகுதி உடையவன் ஆகி விட்டான் அத்தகைய சிறப்பு மிக்கது பாகவத புராணம்" என்று கூறினர். என்று, சனகாதி முனிவர்கள் இக்கதையை நாரதருக்கு கூறினர்.