இதுவல்லவா புத்திசாலிதனம்! எமனையே தன் வாதத்தால் மடக்கி கணவனின் உயிரை மீட்டெடுத்த சாவித்திரியின் கதை!

“அப்பா.. அவரை நான் மனதார கணவனாக நினைத்துவிட்டேன். அவரில்லையேல் எனக்கு திருமணமே தேவையில்லை.” என்று கூறவும், தனது பெண்ணின் விருப்பமே தனது விருப்பம் என்று எண்ணிய அஸ்வபதி சத்தியவானுக்கு சாவித்திரியை மணம் முடித்து தந்து விட்டார்.
எமன் சத்தியவானின் உயிரை எடுத்தல்
எமன் சத்தியவானின் உயிரை எடுத்தல்PT
Published on

சத்தியவான் சாவித்திரி கதை தெரியுமா? இது யாருக்காக எங்கே எப்போ சொல்லப்பட்டது தெரியுமா?

மகாபாரதத்தில் யுதிஷ்டிரன் (தர்மன்) மார்க்கண்டே மகரிஷியிடம், “திரௌபதியின் பக்திக்கு இணையான ஒரு பெண் இதுவரை இருந்திருக்கிறாளா ?” என்று கேட்டதற்கு , மார்க்கண்டேயர் இந்தக் கதையைக் கூறி பதிலளிக்கிறார்.

“யுதிஷ்டிரரா.. இருக்கிறாள். அவளின் பெயர் சாவித்திரி. தனது கணவரின் உயிரை பறித்த எமதர்மராஜாவிடம் தனது சாதுர்ய பேச்சால், மறுபடியும் தனது கணவனின் உயிரை எமதர்மனிடமிருந்து மீட்டெடுத்த கதையினை சொல்கிறேன் கேள்.. ” என்று சாவித்திரியின் கதையினை சொல்ல ஆரம்பித்தார்.

“ஒரு சமயம், மத்திர நாட்டை அஸ்வபதி என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அஸ்வபதி தம்பதியினருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால், பிரம்மாவை வேண்டி ஒரு யாகத்தை வளர்த்தார். யாகத்தின் பலனாக அத்தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது அதற்கு சாவித்திரி என்று பெயரிட்டு வளர்த்தார். சாவித்திரி மிகவும் புத்திசாலி, ஒழுக்கம் பண்பு ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினாள். அவள் திருமணப்பருவத்தை அடைந்ததும் அவளுக்கு விவாகம் செய்து வைக்க எண்ணினார் அஸ்வபதி . ஆனால், சாவித்திரிக்கு யாரையும் மனதால் பிடிக்கவில்லை. இந்நிலையில், ஒரு நாள், அவள் மரம் வெட்டும் இளைஞன் ஒருவரை பார்க்கிறாள். அந்த இளைஞன் கண்கள் தெரியாத தன் தாய் தந்தையாருக்கு உதவிகரமாக இருப்பதுடன் மற்ற உயிரினங்களிடையே அன்பாக இருப்பதைக் கண்ட சாவித்திரிக்கு அவ்விளைஞனை மிகவும் பிடித்து போயிற்று. தன் தந்தை அஸ்வபதியிடம் வந்து கூறுகிறாள். “தந்தையே இன்று நான் ஒரு இளைஞரை சந்தித்தேன். அவன் மிகவும் அற்புதமானவன். அவனையே திருமணம் செய்துக்கொள்ள எண்ணுகிறேன்” என்றதும், அஸ்வபதி மனம் மகிழ்ந்தார். தன் பெண் ஒருவரை விரும்புகிறாள் என்றால், அவன் வீரம் மிகுந்தவனாகவும், அன்பானவனாகவும் இருக்கவேண்டும்.” என நினைத்தவர், அவ்விளைஞர் யார் என்று தெரிந்து வர விரும்பி தனது சேவகனை அனுப்புகிறார்.

அவனும் அவ்விளைஞனை பற்றி விசாரித்ததில் அவன் சாலுவ தேசத்து மன்னரான தியுமத்சேனாவின் மகன் சத்தியவான் என்றும், எதிரிகளிடம் நாட்டை இழந்தும், எதிரிகளால் நாடு கடத்தப்பட்டதில் அவர்கள் காட்டில் வசித்து வருகிறார்கள் என்று சேவகன் தெரிவித்தான்.

அச்சமயம் அங்கு வந்த நாரதரிடம் தனது மகள் விரும்பும் அஸ்வபதியின் எதிர்காலத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டினார். முக்காலமும் அறிந்த ஞானியான நாரதரோ.. “ மன்னா.. நீ நினைத்தது போல் சத்தியவான் மிகவும் நல்லவனே.. ஆனால், அவனுக்கு அற்ப ஆயுசு. துர்மரணம் சம்பவிக்கும். இதனால் சாவித்திரியின் வாழ்க்கையானது கேள்வி குறியாகி விடும். ஆகவே, வேறு ஒரு இளவரசனை மணம் முடித்தால் நலம்” என்று கூறி சென்று விட்டார்.

நாரதர் கூறியதை அஸ்வபதி தன் மகளான சாவித்திரியிடம் தெரிவித்தார், ஆனால் சாவித்திரியோ, “அப்பா.. அவரை நான் மனதார கணவனாக நினைத்துவிட்டேன். அவரில்லையேல் எனக்கு திருமணமே தேவையில்லை.” என்று கூறவும், தனது பெண்ணின் விருப்பமே தனது விருப்பம் என்று எண்ணிய அஸ்வபதி சத்தியவானுக்கு சாவித்திரியை மணம் முடித்து தந்து விட்டார். சிறிது காலம் இருவரும் சிறப்பாகவே இல்லறம் நடத்தி வந்தனர்.

Picasa

சிறிது நாட்களிலேயே நாரதர் சொன்ன நாளும் வந்தது. ஒருமுறை காட்டில் விறகு சேகரிக்க தம்பதியாக இருவரும் சென்ற பொழுது, சத்தியவான் உயிரானது பிரிந்தது. என்னசெய்வது என்று தெரியாமல் திகைத்த சாவித்திரி, சத்தியவானின் உடலை தன் மடியில் கிடத்தி அழுதபடி இருந்தவளுக்கு அந்நிகழ்ச்சி கண்களில் தெரிந்தது. ஆம்.. எமதர்ம ராஜா சத்தியவானின் உயிரை பறித்துக்கொண்டு கைகளில் பாசக்கயிறுடன் தனது வாகனமான எருமை மாட்டின் மீது ஏறி சென்றுக் கொண்டிருந்தார். இதைக் கண்டதும் சற்றும் தாமதிக்காக சாவித்திரி அவரை பின் தொடர்ந்து சென்றாள்.

இதைக்கண்ட எமதர்ம ராஜாவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது . ஒரு பெண்ணின் கண்களுக்கு நான் புலப்படுகிறேன் என்றால் அவள் நிச்சயம் பதிவிரதையாகத் தான் இருக்க வேண்டும் என எண்ணியவர், “பெண்ணே என்னை தொடர்ந்து வரும் நீ யார்? ” என்றார்.

சாவித்திரியோ.. “நான் சாலுவதேசத்து அரசர் தியுமத்சேனா மருமகள். ” என்றாள்.

“சரி எதற்காக என்னை பின் தொடர்ந்து வருகிறாய்?”

“நீங்கள் கொண்டு செல்லும் உயிரானது எனது கணவருக்கானது. அதை திருப்பி தந்துவிடுங்கள் நான் சென்றுவிடுகிறேன்” என்றாள்.

“உடலிலிருந்து எடுத்த உயிரை திருப்பி தருவது தர்மமாகாது... ஆகவே நீ திரும்பி சென்றுவிடு”

எது தர்மம்? தன் கணவனுக்கு ஆற்றவேண்டிய தர்மம் என்ன?, இறைவனுக்குச் ஆற்றவேண்டிய தர்மம் என்ன?, பித்ருக்களுக்குச் ஆற்றவேண்டிய தர்மம் என்ன?, பிள்ளைகளுக்குச் ஆற்றவேண்டிய தர்மம் என்ன?, சக மனிதர்களுக்குச் செய்யவேண்டிய தர்மம் என்ன? என்று சாவித்திரி மனிதர்கள் தர்மத்தை எடுத்துக்கூறியதும். மகிழ்சியடைந்த எமதர்ம ராஜா, அவளிடம் , பதிவிரதையான உனக்கு ஒரு வரம் தருகிறேன், அதை நீ கேள்”. என்றார்.

இது தான் சமயம் என்று சாவித்திரி தனது புத்திசாலி தனத்தால், “தியுமத்சேனா தனது இழந்த கண்களை திரும்ப பெற்று, சாலுவதேசத்தை ஆள்வதுடன் தனது நூறு பேரபிள்ளைகளுடன் விளையாட வேண்டும்” என்றாள்.

“அப்படியே ஆகட்டும்” என்று வரம் தந்த எமராஜன், சாவித்திரியின் அறிவுக்கூர்மையை வியந்து, சத்தியவானின் உயிரை திருப்பி தந்தான்.

அதன்படி சாலுவதேசத்தை மறுபடி தியுமத்சேனா ஆட்சி செய்து வந்தார். சாவித்திரியும் சத்யவானும் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்தினர்.

என்று மார்கண்டேய மகரிஷி யுதிஷ்டின்னுக்கும், திரௌபதிக்கும் இக்கதையை சொல்லியதாக புராணங்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com