நமிநந்தி அடிகளார்
ஏமப்பேறூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் தான் நமிநந்தி அடிகள். இவர், சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். அதிலும் திருவாரூர் தியாகராஜர் மேல் அரும்பக்தி கொண்டிருந்தார். ஒருநாள் அறநெறி என்னும் கோயிலுக்குச் சென்று திருத்தொண்டு புரிய நினைத்தவருக்கு அங்கு ஆலயத்துள் தீபங்கள் சரிவர ஏற்றப்படாமல் இருப்பதைத் தெரிந்துக்கொண்டு, சிவபெருமானுக்கு தீபமேற்ற நினைத்தவர் அதற்காக எண்ணெய் இல்லாததால் கோயிலுக்கு அருகில் இருந்த வீட்டில் எண்ணெய் இரவல் வாங்கச்சென்றார்.
அந்த வீட்டில் இருந்தவர்கள் சமண மதத்தை தழுவியவர்கள் ஆகையால் நமிநந்தியிடம், சிவபெருமானுக்கு தீபம் எரிக்க எண்ணெய் கிடையாது. வேண்டுமென்றால் தண்ணீரில் விளக்கேற்றிக்கொள் என்று கூறவும், வருத்தத்துடன் ஆயலத்திற்கு திரும்பிய நமிநந்தி அடிகள் சிவபெருமானை நினைத்து வணங்கி, ” ஈசனே... உனக்கு தீபமேற்ற என்னிடம் வசதி இல்லையே... நீரில் தீபமேற்றுகிறேன். என்னை மன்னித்து ஏற்றுக்கொள்” என்று நினைத்தவர், கோயில் குளத்தில் இருந்த நீரை எடுத்து ஆலய விளக்குகளில் ஊற்றி தீபம் ஏற்றினார்.
ஆச்சர்யமாக, அனைத்து விளக்குகளும் பிரகாசமாக எரிந்தன. நமிநந்தி சிவபெருமான் மீது வைத்திருந்த பக்தியானது கொஞ்சம் கொஞ்சமாக அனைவருக்கும் தெரிய வந்தது. அதனாலேயே பலர் சமண மதத்தினை விட்டு மீண்டும் சைவமதத்தை தழுவ ஆரம்பித்தனர். இவர் பிறப்பால் அந்தணர் ஆதலால் சற்று தீட்டு பார்க்கும் எண்ணம் உள்ளவர். வெளியில் சென்று வந்தால் நீராடாமல் அடுத்த வேலையை ஆரம்பிக்க மாட்டார்.
இந்த நிலையில் பங்குனி உத்திர திருவிழாவானது திருவாரூரில் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நமிநந்தி அடியார் திருவிழாவில் கலந்துக்கொண்டு சிவபெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்து முடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்தவர் தனது மனைவியிடம்,”கோவிலுக்கு பலரும் வந்திருப்பா... என் மேல தீட்டு பட்டிருக்கும். நான் ஸ்நானம் செய்யனும், வெந்நீர் போடு “ என்று கூறியவர் திண்ணையிலேயே படுத்து உறங்கிவிட்டிருந்தார்.
அச்சமயம் அவரது கனவில் வந்த சிவபெருமான், “இங்கு பிறந்த அனைவருமே நமது கணங்கள் தான். அவர்களுக்குள் குல வேற்றுமை காணாதே...” என்று கூறியதைக் கேட்ட அந்தணர் நமிநந்தி திடுக்கிட்டு விழித்தார். தான் செய்த தவறு உறைத்தது.
மனம் வருந்தியவராக, “சிவபெருமானே... என்னை மன்னித்துவிடு, குலவேற்றுமை என்ற திரையை களைந்து என் கண்களை திறந்தாய். இனி நான் குல வேற்றுமை பார்க்கமாட்டேன்” என்று கூறியவர், வெந்நீருக்குக் காத்திராமல் உள்ளே சென்று சிவபெருமானுக்கு அடுத்த காலபூஜைகளுக்கு ஆயத்தமானார்.
அதிலிருந்து நமிநந்தி குல வேறு பாடு காணாமல் அனைவருடனும் நன்கு பழகி சிவபெருமானுக்கு கைங்கர்யம் செய்து இறுதியில் கைலாயத்தை அடைந்தார் .