மதுரையை ஆண்டுவந்த மலையத்துவஜன் என்ற பாண்டிய மன்னனுக்கும், அவரது மனைவி காஞ்சனமாலைக்கும் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் கிடைக்காததால் அவர்கள் பார்வதி, பரமசிவனை வேண்டி யாகம் செய்தனர். யாகத்தின் பலனாக மனமிறங்கிய பார்வதி தானே 3 வயதுப் பெண் குழந்தையாக நெருப்பில் இருந்து வந்து காஞ்சனமாலைக்கு குழந்தையாக கிடைக்கிறார்.
குழந்தையைப் பார்த்து மகிழ்ந்து போன அரசனும், அரசியும் அந்தக் குழந்தை மூன்று ஸ்தனங்களுடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில், வானில் தோன்றிய அசரீரி பெண் குழந்தையை ஆண்பிள்ளை போல வளர்த்து பட்டத்து ராணியாக முடி சூட்டுவதோடு, மணப் பருவம் வந்த உடன் அவளது மூன்றாவது ஸ்தனம் மறைந்துவிடும் எனக்கூறுகிறது.
சிறுவயதில் இருந்தே அனைத்து வகை போர்க்கலைகளையும் கற்றுத் தேர்ந்தவராக மீனாட்சியம்மன் பாண்டிய மன்னனால் வளர்க்கப்படுகிறார். மதுரையின் அரசியாக, மங்கையர்க்கரசி மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடத்த மலையத்துவஜ மன்னன் முடிவு செய்து மீனாட்சியம்மனை மதுரையின் ராணியாக அரசியாக பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார்.
மதுரையின் அரசியாக பட்டம்சூடிக்கொண்ட மீனாட்சி பட்டாபிஷேகத்திற்குப் பிறகு மதுரையிலிருந்து படையுடன் கிளம்பி, ஒவ்வொரு திக்கிற்கும் சென்று போர்தொடுக்கிறார்.
அஷ்டதிக் பாலகர்களை வெல்வதற்காக இந்திர விமானத்தில் மீனாட்சியம்மன் கிழக்கு திசையில் இந்திரனையும், அக்னி மூலையான விளக்குத்தூண் சந்திப்பில் அக்னியையும், தெற்கில் எமனையும், நிருதி திசையான தெற்கு - மேலமாசி வீதி சந்திப்பில் நிருதியையும், மேற்கில் வாயுவையும், வடக்கில் குபேரனையும் வென்று வடக்குமாசி - கீழமாசி வீதி சந்திப்பிற்கு வந்தார். ஈசானி மூலையான அங்கு சுவாமியுடன் அம்மன் போர் புரிய, இறுதியில் சொக்கநாதரை எதிர்கொண்டு போரிட முடியாமல் காதல் வயப்பட்டு விடுவார். அப்போது மீனாட்சியம்மனின் மூன்றாவது ஸ்தனம் மறைந்துவிடும்.
தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபோகம் நடைபெறும். தேவர்கள், ரிஷிகள், பெருமாள், பிரம்மன் என தேவாதி தேவர்கள் புடை சூழ மதுரையில் மீனாட்சியம்மனுக்கு திருமணம் நடைபெறும்.
தெற்கில் இருப்பவர்கள் சிவ, பார்வதியின் திருமணத்தை நேரில் காண வேண்டும் என்பதற்காக இந்த திருவிளையாடலை இறைவன் நடத்தியதாக புராணங்கள் கூறுகிறது.
மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு திருக்கல்யாண விருந்துண்ட குண்டோதரனின் தாகத்தை தீர்ப்பதற்காக சிவபெருமான் குண்டோதரனின் கையை தரையில் வை கை என சொல்லி வைகை ஆற்றை உருவாக்கியதாகவும் வரலாறு உண்டு.
பக்தனுக்காக கால் மாற்றி ஆடிய சொக்கன்.
மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமணத்தை காணும் பொருட்டு தேவர்கள், மகரிஷிகள் சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தனர். இத்திருமணத்திற்கு வந்தவர்களில் வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை. மணவீட்டவர்கள் இவர்களை சாப்பிட அழைத்தனர். ஆனால் இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் கண்டு உண்ணும் வழக்கமுடையவர்கள். ஆகவே, “நாங்கள் சிவதாண்டவம் கண்ட பின்பே சாப்பிடுவோம்” என்றனர் . அதைக்கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டினார்.
ஒருமுறை மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டு வந்தான். சிவபக்தனான இவன் ஆயகலைகளில், 63 ஐ கற்றுத்தேர்ந்தான். பரதம் மட்டும் பாக்கியிருந்தது. எனவே அதையும் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு பரதத்தை கற்றான். முதல் நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்கு, காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு சுள்ளென ஓர் உண்மை உரைத்தது.
“ஆஹா! பரதத்தை ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே! இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்?” என நினைத்தவன், நடராஜர் சன்னதிக்குச் சென்றான்.
“பகவானே! உன் கால் வலிக்குமே! காலை மாற்றி ஆடு!” என வேண்டினான். பக்தனின் வேண்டுதலை ஏற்ற சிவன், அவனுக்காக இடக்காலை ஊன்றி, வலது காலை தூக்கி ஆடினார். இவர் சுந்தரேஸ்வரர் மகாமண்டபத்தில் கால் மாற்றி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார். வியாக்ரபாதர், பதஞ்சலிக்காக ஆடிய ஆனந்த தாண்டவமும், மன்னனுக்காக கால் மாற்றி ஆடிய தாண்டவமும் நடராஜர் சன்னதி எதிரேயுள்ள சுவரில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது. இக்கோயிலில் வலதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால், இந்த வலது பாதத்தை சிவனின் பாதமாக கருதுகின்றனர். சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தை தரிசிக்கலாம் என்பது கூடுதல் விசேஷம்.