எந்த ஒரு விஷயத்தையும் விநாயகரை வழிபட்டுவிட்டு தொடங்கினால், தடங்கல் இல்லாமல் அது நடக்கும் என்பது நம்பிக்கை. அப்படியான விநாயகரை கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழாவானது, பிற இடங்களை காட்டிலும் பிள்ளையார்பட்டியில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
விநாயகரை பூஜிக்க மிகவும் கஷ்டப்பட தேவையில்லை. சிறு குழந்தைகூட, மஞ்சளை அரைத்து ஒரு பிடி பிடித்து வைத்தால் போதும்... பிள்ளையார் தயார்! பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி தன் பக்தர்களுக்கு அருள் புரிவார்.
விநாயகர் தன் கைகளில் யானையை அடக்கும் பாசத்தையும், அங்குசத்தையும் ஏந்தி இருப்பார். இவர் வயிறு பெருத்திருப்பதற்கு ஒரு குறிப்பும் உண்டு. அதாவது ‘அகில உலகங்களும் மணி வயிற்றில் அடங்கிக்கிடப்ப’ என்பதை உணர்த்தும் பொருட்டு இவருடைய மத்தள வயிறு காணப்படுகிறது.
விநாயகர் ’இச்சாசக்தி, கிரி யாசக்தி, ஞானசக்தி’ என்ற மும்மந்திரத்தை பொழியக்கூடியவர். விநாயகரின்
கும்பம் ஏந்திய கை - படைக்கும் தொழிலையும்,
மோதகம் ஏந்திய கை - காத்தல் தொழிலையும்,
அங்குசம் ஏந்திய கரம் - அழித்தல் தொழிலையும்,
பாசம் ஏந்திய கரம் - மறைத்தல் தொழிலையும்,
தந்தம் ஏந்திய கரம் - அருளல் தொழிலையும்
புரிகின்றன. எனவே விநாயகர் சிருஷ்டி, திதி, சங்காரம், திரவு பவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை தன் ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார் என்று நம்பப்படுகிறது.
எளிதாக கிடைக்கக்கூடிய அருகம்புல், விநாயகருக்கு மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும். விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்துவந்தால், நாம் நினைத்தது நிறைவேறும். சிதர் தேங்காயின் ஒலி விநாயகருக்கு மிகவும் விருப்பமாம்! அதனாலேயே சிதர் காய் அவருக்கு சாற்றப்படுகிறது.