கேதார்நாத். இது உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற கேதாரீஸ்வரர் கோயில் உள்ளது. 12 ஜோதிர் லிங்கத்தில் இதுவும் ஒன்று. பருவநிலை மாற்றத்தை கருத்தில்கொண்டு, கேதாரீஸ்வரர் திருக்கோயிலானது வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். அதன்படி ஏப்ரல் மாதத்தில் பக்தர்களுக்காக திறக்கப்படும் இக்கோயில், அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது தீபாவளி கழித்து மூடப்பட்டு விடும்.
இத்திருக்கோயில் மூடப்படும் நாளில் தேவர்கள் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். ஆகவே இக்கோயில் மூடப்படும் நேரத்தில் இங்கு மிகப்பெரிய நெய் விளக்கு ஏற்றப்படுகிறது. ஆறு மாதம் கழித்து மீண்டும் கோயில் திறக்கப்படும் நேரம், அந்நெய் தீபமானது அணையாமல் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கும். இந்த அதிசயத்தை காண திரளான பக்தர்கள் ஏப்ரல் மாதம் கேதார்நாத் நோக்கி வருகிறார்கள்.
இக்கோயின் பெருமைகள் என்னென்ன?
ஆதிசங்கரர் தான் இக்கோயிலை புணரமைத்தார். தனது சீடர்களுடன் பலகாலம் தங்கிய அவர், தனது சீடர்களுக்காக இங்கு வெந்நீர் ஊற்று ஒன்றையும் அமைத்தாராம். இப்போதும் அவ்வெந்நீர் ஊற்றில் பக்தர்கள் நீராடிய பின்னரே மலைப்பாதையில் பயணிக்கின்றனர். ஆதிசங்கரர் இங்கு வந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டு இக்கோயிலின் பின்வழியாக உள்ள இமயமலையின் சிகரம் வழியாக சிவபதம் அடைந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
பாண்டவர்களும் சிலகாலம் இங்கு தங்கி இக்கோயிலை புணரமைத்ததாகவும், அர்ஜூனன் சிவபெருமானிடமிருந்து பாசுபத அஸ்திரத்தை இத்தலத்தில்தான் பெற்றுக்கொண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. இங்கிருக்கும் ருத்ரப்ரயாக் என்ற இடத்தில் மந்தாகினி நதியும் அலக்நந்தா நதியும் ஒன்றாக கங்கையில் இணைகின்றன.