ராமாயணத்தில் குகன் கதாபாத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ராமனே குகனை தனது தமயனாக ஏற்றுக்கொண்டதாக வால்மீகி ராமாயணத்திலும், கம்பராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளது. இதில் கம்பராமாயணத்தில் மூன்று இடங்களில் குகனை பற்றி பேசப்பட்டுள்ளது. இந்த குகன் யார், அவருக்கும் ராமனுக்கும் உள்ள நட்பு என்ன, கம்பராமாயணத்தில் எந்த மூன்று இடங்களில் அவரை பற்றி கூறப்பட்டுள்ளது என்பதை இங்கு பார்க்கலாம்.
சிருங்கிபேரம் என்ற நாட்டை ஆண்டு வந்தவன் குகன். இந்த நாடு, காடும் நதியும் சார்ந்த இடம். இங்கிருக்கும் மக்கள் காட்டையே நம்பி இருக்கும் வேடுவ இனத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் தலைவன்தான் குகன்.
குகன், அயோத்தியின் இளவரசரான ராமரை பற்றி கேள்விப்பட்டு அவரின் மேல் மிகுந்த அன்புடன் இருந்தான். ஆனால் அவரை நேரில் சந்தித்ததில்லை. இதனால் கம்பராமாயணத்தில் குகன் ராமன் மீது வைத்திருந்த பற்றை, ஆண்டாள் கண்ணனின் மேல் வைத்திருந்த காதலுடன் ஒப்பிடுகிறார் கம்பர்.
தசரதனின் ஆணையின்படி ராமர் தன் மனைவி சீதை மற்றும் தமயன் லெட்சுமணனுடன் வனவாசம் புறப்படுகிறார். இவர்களை காட்டிற்கு கொண்டுவிடும் பொறுப்பை சுமந்திரன் ஏற்கிறான். அயோத்தி மக்களுக்கு ராமரை பிரிய மனமில்லாததால், சுமந்திரன் ஓட்டி சென்ற தேரின் பின்னால் தொடர்ந்து வருகிறார்கள். தேரானது சிருங்கிபேரம் நாட்டை அடைந்தது.
அந்நாட்டின் அரசனான குகனுக்கு ராமன் தன் நாட்டிற்கு வந்த செய்தி தெரிந்தவுடன், அவரை சந்திக்கும் பொருட்டு மலைத்தேனுடன் மீனை ஆசையுடன் கொண்டுச்செல்கிறான். ஆனால் குகன் ராமனை சந்தித்ததில்லையாததால், லெட்சுமனனை ராமர் என்று எண்ணி அவருடன் உரையாட ஆரம்பிக்கின்றான்.
ஒருகட்டத்தில் “நான் லெட்சுமணன், அண்ணா உள்ளிருக்கிறார்” என்று லெட்சுமணன் கூறவே, உள்சென்ற குகன் முதன்முதலாக ராமனை சந்தித்து, தேனையும், மீனையும் தருகிறான். பின் ராமனிடம், “நீங்கள் என்னுடன் சிருங்கிபேரத்திலேயே தங்கிவிடுங்கள்” என்கிறான். அதை மறுத்த ராமர், குகனிடத்தில் “நால்வருடன் ஐவரானோம். ஆகையால், தமயனே... எங்கள் மூவரையும் அயோத்தி மக்களிடமிருந்து பிரித்து வனவாசம் செய்ய உதவவேண்டும்” என்று கேட்கிறார். அதன்படி அயோத்தி மக்கள் யாரும் அறியாதபடி ராமர், சீதை, லெட்சுமணனை நாவாய் மூலமாக அடர் காட்டுக்குள் கொண்டு சென்று சேர்கிறான் குகன்.
பரதன் தனது தமயன் ராமனை தேடிக்கொண்டு சிருங்கிபேரம் வந்த சமயம் அதை அறிகிறார் குகன். ஆனால் பரதன், ராமனுடன் போரிட்டு அவரை அழிக்க வந்திருக்கிறான் என்று நினைத்து பரதனை எதிர்க்க கிளம்பினான் குகன். அப்போது பரதன் குகனிடம் “என் தமயனை நீங்கள் தான் பார்த்தீர்கள் என்றும், அவருடன் பேசினீர்கள் என்றும் மக்கள் கூறுகின்றனர். அவரை அழைத்துக்கொண்டு அயோத்தி செல்லவே நான் வந்திருக்கிறேன். அவர் எங்கே?” என்று கேட்டான். பரதன் ராமனின் மேல் கொண்டிருந்த அன்பை பார்த்த குகன், “நீ ஆயிரம் ராமனுக்கு சமம்” என்று கூறியதாக கம்ப ராமாயணத்தில் எழுதப்பட்டு இருக்கிறது.
நிறைவாக, விடைக்கொடுத்த படலம் என்ற இடத்தில், ராமரின் பட்டாபிஷேகத்திற்கு குகன் வருகிறான். அங்கு ராமரிடத்தில் தன்னை “நாவாய் வேட்டுவன் நாய் அடியேன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். ராமனும் குகனுக்கு பரிசு பொருட்கள், ஆடை ஆபரணங்கள் அனைத்தையும் கொடுத்து அவனை கௌரவிப்பதாக கூறப்பட்டுள்ளது.