விநாயகர் சதுர்த்தியன்று, நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். பூஜைமுடிந்த மூன்றாம் நாள் அச்சிலையை நீர்நிலைகளில் கரைத்தல் வேண்டும்.
விநாயகர் பக்தர்களில் தலை சிறந்தவர் புருசுண்டி முனிவர். இவர் விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து உயர்ந்த நிலை அடைந்தனர் என்று புராணங்கள் கூறுகின்றன.
தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப்பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது என்றும் கூறப்படுகிறது.
சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தை, தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான் என்றும் சொல்லப்படுவதுண்டு.
சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகிறது.
தும்பைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா இலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும், மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.
கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்ம வாகனத்திலும், த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும், துவாபர யுகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும், கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியதாக கூறப்படுகிறது.