இந்தியாவில் காலங்காலமாக கொண்டாடப்பட்டு வரும் இந்நாளின் பின்னுள்ள சுவாரஸ்ய விஷயங்களை, இக்கட்டுரையில் பார்ப்போம்!
ரக்ஷா பந்தன் நாளில், பெண்கள் ஆண்களின் கைகளில் ராக்கி என்ற பட்டுநூலை கட்டிவிடுவர். இதன்மூலம், தன்னை காக்கும் சகோதரராக அந்த ஆணை பெண்கள் ஏற்றுக்கொள்வர். உடன் பிறந்த சகோதரன் மட்டுமன்றி, சகோதரனாக தாங்கள் நினைக்கும் ஆணின் கையிலும் பெண்கள் ராக்கி கட்டுவதுண்டு. பெண்ணிடம் இருந்து இந்த ராக்கியை பெறும் ஆண், அவளின் கடினமான காலங்களில் அவளுக்கு உற்றத்துணையாக இருப்பான் என்பது ஐதீகம்.
ரக்ஷா என்றால் காப்பாற்றுதல், பந்தன் என்றால் உறவு. அதனால் இத்தினத்துக்கு ரக்ஷா பந்தன் (காப்பாற்றும் உறவு) என்று பெயர்.
‘ஒரு பெண்ணின் மிக கடினமான காலத்தில், அவளின் சகோதரர்கள் மட்டுமே அப்பெண்ணை காப்பாற்ற அதிகம் முனைவர்’ என்ற அடிப்படையில்தான், ரக்ஷா பந்தன் அன்று பெண்கள் தங்களின் சகோதரர்களுக்கு (சகோதரராக நினைப்பவருக்கும்) கைகளில் ராக்கி கட்டுகின்றனர்.
மகாபாரதத்தில், ஒருசமயத்தில் கிருஷ்ணனின் கையில் காயம் ஏற்பட்டு அதிலிருந்து குருதி வெளிப்பட்டது. அச்சமயம் அருகில் இருந்த திரௌபதி தனது பட்டாடையின் ஓரத்தை கிழித்து கிருஷ்ணணின் விரலில் கட்டுகிறாள். அச்சமயம் கிருஷ்ணன் அவளிடம், “திரௌபதி, உன்னுடைய கடின நாட்களில் ஒரு தமயனாக நான் இருந்து உனக்கு உதவி செய்வேன்” என்று கூறுகிறார். அதன்படி தக்க சமயத்தில் திரௌபதியை காக்கிறார். இந்நிகழ்வினை நினைவு கூறும் விதமாகத்தான் பெண்கள், இன்றும் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டும் பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.
ரக்ஷா பந்தன், வட இந்தியாவில் இன்றளவும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராக்கி கட்டும் பெண்கள் புத்தாடை உடுத்தி, இனிப்பை தங்கள் சகோதரர்களுக்கு தந்து, அவர்களின் கைகளில் ராக்கியை கட்டிவிடுவர். ராக்கியை பெறும் ஆண் தன் மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக தன் சகோதரிக்கு பரிசு பொருட்களை வழங்குவார்.