வில்வித்தை ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர். காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர்களான பிரவீன் ஓஜஸ், அபிஷேக் வெர்மா மோதினர். முதல் இடம் பிடித்த பிரவீன் ஓஜஸ் தங்கப்பதக்கமும், அபிஷேக் வெர்மா வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
வில்வித்தை மகளிர் தனிநபர் பிரிவில் ஜோதி சுரேகா, தென்கெரிய வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஜோதி சுரேகா வெல்லும் 3ஆவது தங்கப்பதக்கம் இதுவாகும். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் இந்தோனேஷிய வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார்.
மகளிர் கபடி போட்டியில் இந்தியா அணி சீன தைபேவை எதிர்கொண்டது. இரு அணிகளும் அதிரடியாக விளையாடி, புள்ளிகளை குவித்தன. இறுதியில் 26க்கு 24 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்றது. இதன்மூலம் ஆசிய விளையாட்டில் இந்தியா 100ஆவது பதக்கத்தை கைப்பற்றியது.
தொடர்ந்து நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியிலும் இந்தியா தங்கம் வென்றது. அதேசமயம் இந்தியா ஈரான் அணிகளுக்கு இடையிலான ஆடவர் கபடி இறுதிப் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. இறுதிப்போட்டியில் போட்டி முடிவதற்கு 2 நிமிடங்களே இருந்த நிலையில் நடுவர்களின் முடிவுக்கு இரு நாட்டு வீரர்களும் மாறி மாறி எதிர்ப்பு தெரிவித்ததால் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் நடுவர்கள் குழப்பம் அடைந்தனர். இதனால் போட்டி சுமார் அரைமணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இறுதியில் நடந்த விறுவிறுப்பான போட்டியில் 33க்கு 29 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை வென்று இந்தியா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
இதனிடையே ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. ருதுராஜ் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் தங்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. மழையால் ஆப்கானிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டி ரத்தான நிலையில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளது.
இதன் மூலம் 28 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என 100 பதக்கங்களுடன் புள்ளி பட்டியலில் இந்தியா 4ஆவது இடத்தில் தொடர்கிறது. ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்தியா இதற்கு முன் 70 பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்தது. இதனை முறியடித்ததுடன் முதன்முறையாக 100 பதக்கங்களை கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது. ஆசிய விளையாட்டில் இந்தியா 100ஆவது பதக்கத்தை கைப்பற்றியதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.