செய்தியாளர் - ரமேஷ்கண்ணன்
___________
சபரிமலையில் அதிகாலை கணபதி ஹோமம் முதல் நெய்யாபிஷேகம் வரை அடுத்தடுத்து நடைபெறும் தொடர் பூஜைகளால் ஐயப்பனுக்கு ஏற்படும் உஷ்ணத்தை தணிக்க மலரிதழ்கள்களால் அர்ச்சனை செய்யப்படும் பூஜைதான் "புஷ்பாபிஷேகம்". "உத்திஷ்டகார்ய சித்தி"க்கு செய்யப்படும் "புஷ்பாபிஷேகம்" ஐயப்பனுக்கு மிகவும் பிடித்தமான அபிஷேகங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
அப்படியான புஷ்பாபிஷேகம், சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு தலைமையில், மேல்சாந்தி முரளி நம்பூதிரி முன்னிலையில் நேற்று நடந்தள்ளது. தாமரை, தத்தி, கூவளம், அரளி, சாமந்தி, மல்லிகை, ரோஜா ஆகிய மலர்களோடு துளசியும் புஷ்பாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்டன. ஐயப்பனுக்கு உடல் நோவாமல் மென்மை கலந்து மகிழ்வுண்டாக்க, கூடை கூடையாய் மலரிதழ்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.
தேனி, திண்டுக்கல், ஓசூர் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் இருந்து நேரடியாக மலர்கள் வாங்கப்பட்டு அந்த மலர்களைக் கொண்டு ஐயப்பனுக்கு "புஷ்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த "புஷ்பாபிஷேகம்" சிறப்பு பூஜையில் பங்கேற்கும் பக்தர் ஒருவருக்கு 12,500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்பதிவு செய்து கட்டணம் செலுத்திய பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
"புஷ்பாபிஷேகத்தில் பங்கேற்றால் சகல ஐஸ்வர்யங்களும் பொங்கும் என்பதும் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதும் ஐதீகமாக உள்ளது.