மனிதனை மனிதனே சுமந்து செல்வதா? தருமபுர ஆதீன பட்டணப்பிரவேசத்திற்கு கடும் எதிர்ப்பு-போலீசார் குவிப்பு

மயிலாடுதுறை தருமபுர ஆதீன கர்த்தர் இன்று இரவு பட்டணப்பிரவேசம் மேற்கொள்ளும் நிகழ்ச்சிக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதால் 360-க்கும் மேற்பட்ட போலீசார்இ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறையில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில் ஆண்டுதோறும் ஞானபுரீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழா ஆதீன குருமுதல்வர் குருபூஜை விழா ஆதீன கர்த்தர் பட்டணப்பிரவேச விழா வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும்.

இதில் 11 ஆம் திருநாள் திருவிழாவாக ஆதீன கர்த்தர் பட்டணப்பிரவேசம் செய்யும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடப்பது வழக்கம். குருமகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தோளில் சுமந்து சென்று ஆதீன திருமடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டினபிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும்.

adheenam
adheenampt desk

மனிதனை மனிதன் தூக்கிச் செல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகளின் எதிர்ப்பால் கடந்த வருடம் பல்லக்கு தூக்கும் (பட்டணப்பிரவேசம்) நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடைவிதித்தது. மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதித்ததற்கு இந்து அமைப்பினர், பக்தர்கள் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்ட சபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டு தருமபுர ஆதீன கர்த்தரின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில், இந்த ஆண்டு தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிகர நிகழ்வான பட்டணப்பிரவேசம் விழா இன்று இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. பட்டின பிரவேச நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை அப்பகுதி பொதுமக்கள் பல்லக்கில் அமர்த்தி தூக்கிச் செல்வர்

adheena madam
adheena madampt desk

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி, தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் ஆகிய கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதனை முன்னிட்டு தருமபுர ஆதீன மடத்தைச் சுற்றி 360-க்கும் மேற்பட்டட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com