சபரிமலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடை திறக்கப்பட்ட அதிகாலை 02.30 மணி முதல் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கணபதி ஹோமம், நிர்மால்ய தரிசனம் மற்றும் வழக்கமான அபிஷேகத்திற்கு பின் ஐயப்பனுக்கு பிடித்த நெய்யபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த விஷ்ணு சரண்பட், உன்னிகிருஷ்ணன் போத்தி, ரமேஷ்ராவ், துரை ஆகிய நான்கு ஐயப்ப பக்தர்களும், ஐயப்பனுக்கு 18,018 நெய் தேங்காய்களை நெய் அபிஷேகத்திற்காக சமர்ப்பித்தனர். இதற்காக அவர்கள் 20 ஆயிரம் தேங்காய்களில் கண் திறந்து அதன் வழியாக நெய்யை நிரப்பி தயார் செய்தனர்.
இதையடுத்து நெய் தேங்காய்கள் பாம்பா கணபதி கோயிலில் இருந்து டிராக்டரில் சன்னிதானம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து சன்னிதானத்தில் தேவஸ்வம் போர்டு ஊழியர்கள் உதவியுடன் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு தனித்தனி பாத்திரங்களில் நிரப்பப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
நான்கு பக்தர்கள் சார்பில் நெய்யபிஷேகம் ஒன்றிக்கு தலா 10 ரூபாய் வீதம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினர். ஏற்கனவே இந்த நால்வரும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 புத்தாண்டில் 18,018 நெய் தேங்காய் சமர்ப்பித்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்துள்ளனர்.
"நாங்கள் நால்வரும் இணைந்து நடத்தும் தொழில் போல எல்லா ஐயப்ப பக்தர்களுக்கும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க ஐயப்பனை வேண்டுகிறோம்" என்று பெங்களூரை சேர்ந்த உண்ணி கிருஷ்ணன் தெரிவித்தார்.