மதுரை மீனாட்சி அம்மனின் சித்திரை திருவிழாவானது கடந்த 23ம் தேதி தொடங்கி, வரும் மே 8ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் மே 8-ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் உற்சவத்துடன் விழாவானது நிறைவடைய இருக்கிறது.
முத்திரை பதிக்கின்ற இச்சித்திரை திருவிழாவில் நான்காம் நாளான நேற்று மீனாட்சி அம்பாளும் சுந்தரேஸ்வரரும் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.
தங்கப்பல்லக்கானது வில்லாபுரம் பாவற்காய் மண்டபத்திலிருந்து புறப்பட்டு சின்னக்கடைத்தெரு வழியாக சித்திரை வீதிகளில் வலம் வந்து, பின் ஆலயத்திற்குள் வந்தது. விழாவில் சாதி மத வேறுபாடின்றி பக்தர்கள் அனைவரும் பங்குகொண்டு ஒருவருக்கொருவர் அன்னதானம், பானகம், நீர்மோர் வழங்கி சிறப்பித்தனர். கலை நிகழ்சிகளான மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்றவையும் நடைபெற்றன.
முன்னதாக முதல் நாள் அன்று சுவாமி கர்ப்பகவிருட்ச வாகனத்திலும், அன்னை சிம்ம வாகனத்திலும்
இரண்டாம் நாள் அன்று சுவாமி பூத வாகனத்திலும் அன்னை அன்ன வாகனத்திலும்
மூன்றாம் நாள் அன்று சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும் அன்னை காமதேனு வாகனத்திலும் தனித்தனியாக பவனி வந்த நிலையில்
நான்காம் நாளான நேற்று இருவரும் ஒன்றாக இணைந்து தங்கப்பல்லக்கில் பவனி வந்தனர். இவர்கள் கூடவே பிரியாவிடையம்மனும் பவனி வந்தாள்.
இத்தங்கப்பல்லக்கின் ஐதீகமாக திரைச்சீலைகளை விலக்கிய பின்புதான் சுவாமியை காணமுடியும். இதன் சுவாரஸ்ய பின்னணி என்ன தெரியுமா?
மனிதர்களாகிய நம் வாழ்வில் விருப்பம், காமம், க்ரோதம், த்வேஷம் ஆகியவற்றை புறம் தள்ளினால்தான் கடவுளை காணலாம். இதை உணர்த்தும் விதமாகத்தான், தங்கப்பல்லக்கின் திரைச்சீலை விலக்கப்படுகிறது.
இந்த ஐதீகத்தின் அடிப்படையில்தான் நான்காம் நாளான நேற்றும் தங்கப்பல்லக்கில் சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் திரைச்சீலை விலக்கிய பின் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.