செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
மண்டல மற்றும் மகர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சபரிமலையில் தினசரி நடக்கும் நெய்யபிஷேகம் பூஜையால் ஐயப்பனுக்கு ஏற்படும் உஷ்ணம் தணிக்கவும் ஐயப்பன் சக்தியை அதிகரிக்கவும் "களபாபிஷேகம்" பூஜை நடத்தப்படுகிறது. ஸ்ரீ கோயில் முன்புறம் கணபதி ஹோமம் மண்டபத்தில் தந்திரி மற்றும் நம்பூதிரிகள் சந்தனம் மற்றும் குங்குமத்தை தங்கத்தாலான பிரம்ம கலசத்தில் நிறைப்பார்கள். பின்னர் உச்ச பூஜைக்கு முன்னோடியாக களபாபிஷேகம் நடக்கும்.
இதற்காக பிரம்ம கலசம் சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் மேள தாளங்கள் முழங்க பவனியாக எடுத்து வரப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இந்த பூஜையில் பங்கேற்றால் சர்வ ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பதும் நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகமாக உள்ளது. இதனால் களபாபிஷேகம் பூஜையில் பங்கேற்க ஐயப்ப பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் பங்கேற்கும் ஐயப்ப பக்தர்கள் ஒருவருக்கு 38 ஆயிரத்து 400 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பூஜை முடிந்ததும் வழிபாட்டில் பங்கேற்ற ஐயப்ப பக்தர்களுக்கு சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக் காலங்கள் நிறைவுறும் 2025 ஜனவரி 19ம் தேதி வரை தினமும் களபாபிஷேகம் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.