திண்டுக்கல்: பெற்றோரே குழந்தைகளை ஏலம் விட்டு, பின் வாங்கிக்கொள்ளும் வினோத திருவிழா...!

திண்டுக்கல்லில் புனித செபஸ்தியார் ஆலயத்தில் குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா நேற்று நடந்தது. தொடர்ந்து விடிய விடிய நடைபெற்ற கறி விருந்து அன்னதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மலைக்கோட்டை முத்தழகுபட்டி கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் 4 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்படி இவ்வருடம் கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. 2 ஆம் தேதியான இன்று, பகல் சப்பரத்துடன் விழா நிறைவடைய உள்ளது.

cook
cookpt desk

இதில் திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று (01.08.23) முக்கிய நிகழ்வான அன்னதான நிகழ்ச்சி மாலை துவங்கி விடிய விடிய அதிகாலை வரை நடைபெற்றது.

வேண்டுதல்களும் காணிக்கைகளும்!

முன்னதாக நேற்றைய தினம் தங்களது வேண்டுதலை செபஸ்தியார் நிறைவேற்றி தந்ததற்காக அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் தங்களால் முடிந்த காணிக்கையாக அரிசி, பருப்பு தொடங்கி ஆடு - கோழி உள்ளிட்ட இறைச்சிகள், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற காய்கறிகள் மற்றும் சமையல் பொருட்கள் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.

போலவே கடந்த காலங்களில் குழந்தை வரம் கேட்டு செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைத்திருந்த தம்பதியினர், தற்போது குழந்தை பிறந்தபின் திருவிழாவின் போது அந்தக் குழந்தையை ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார்கள். பின்னர் அந்த குழந்தையை நிர்வாகம் சார்பில் ஏலம் விட்டனர். அதில் கலந்து கொண்டவர்கள் குழந்தையை ஏலம் எடுத்து அதற்கான தொகையை ஆலயத்தில் செலுத்தினர். பின்னர் ஏலம் எடுத்தவரிடம் இருந்து குழந்தையின் தாய் தந்தையர் ஏலத் தொகையைக் கொடுத்து தங்கள் குழந்தையை வாங்கிக் கொண்டனர்.

cook
cookpt desk

விடிய விடிய அன்னதானம்!

இதைத் தொடர்ந்து செபஸ்தியாருக்கு பொதுமக்கள் காணிக்கையாக வழங்கிய ஆடு, கோழி, காய்கறிகள் பலசரக்கு சாமான்கள் ஆகியவற்றை கொண்டு சுமார் ஒரு லட்சம் பேருக்கு அசைவ உணவு சமைக்கப்பட்டது. அந்த உணவு அன்னதானமாக மாலை துவங்கி விடிய விடிய அதிகாலை வரை சிறப்பாக அளிக்கப்பட்டது. இதில் முத்தழகுபட்டியில் உள்ள இளைஞர்கள், பெண்கள், ஆண்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் என அனைவரும் கலந்துகொண்டு, அன்னதானத்திற்காக காய் கறிகளை நறுக்குவது - சமையல் செய்வது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைகளில் ஈடுபட்டனர். பொதுவாக இந்த அன்னதானத்தில் சமைப்பதற்கென ஆலய நிர்வாகம் தனியாக சமையல் மாஸ்டர்களை வைத்துக் கொள்வது கிடையாதாம். ஊர் மக்களே ஒன்று சேர்ந்து சமைக்கின்றனர்.

இதற்காக கோயில் வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட அடுப்புகள் அமைக்கப்பட்டு முத்தழகுபட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் பெரிய அண்டாவில் சாதம் மற்றும் கறி குழம்பு தயாரிக்கும் பணியில் காலையிலிருந்தே ஈடுபட்டனர். இதனையடுத்து மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் பக்தர்களுக்கு விடிய விடிய கறி விருந்து அன்னதானம் நடைபெற்றது. இத்திருவிழாவில் பங்கேற்க சென்னை, திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து ஆயிரக் கணக்கானோர் வருகை தந்து அன்னதானத்தில் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com