இரண்டு வாரம் கடந்தும் உக்ரைனை ரஷ்யா இன்னமும் கைப்பற்றாதது ஏன்? ~ ஒரு பார்வை

இரண்டு வாரம் கடந்தும் உக்ரைனை ரஷ்யா இன்னமும் கைப்பற்றாதது ஏன்? ~ ஒரு பார்வை
இரண்டு வாரம் கடந்தும் உக்ரைனை ரஷ்யா இன்னமும் கைப்பற்றாதது ஏன்? ~ ஒரு பார்வை
Published on

உக்ரைனில் படையெடுப்பு தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டநிலையில், இன்னமும் உக்ரைனை ரஷ்யா கைப்பற்றாதது ஏன்? ரஷ்யப் படைகள் பின்னடைவை சந்திக்கின்றனவா? ரஷ்யாவின் திட்டம் என்ன? ஆகிய கேள்விகள் சர்வதேச அளவில் எழுப்பப்பட்டு வருகின்றன.

உக்ரைனின் வடகிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளுடன் கிரீமியாவை இணைக்கும் வகையில் தனது படைகளை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் உக்ரைன் நாட்டில் உள்ள ரஷ்ய ஆதரவாளர்கள் கரம் வலுப்படுகிறது. உக்ரைன் நாட்டில் சுமார் 10 சதவீதம் பேர் ரஷ்ய மொழி பேசுபவர்கள். எனவே அவர்கள் மூலமாக உக்ரைன் நாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அதிபர் புடினின் திட்டமாக பார்க்கப்படுகிறது.

இதற்கு பக்கபலமாக உக்ரைன் நாட்டின் விமான தளங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தி, தலைநகர் கீவ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை ரஷ்ய ராணுவம் எடுத்து வருகிறது.

குறிப்பாக, உக்ரைன் ராணுவத் தளங்களை முடக்கும் நோக்கத்துடன் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதே சமயத்தில், உக்ரைன் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உக்ரைன் நாட்டுப் படைகளை சுற்றி வளைக்கும் திட்டமும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள போலந்து, ஹங்கேரி, ருமேனியா, ஸ்லோவாகியா போன்ற நாடுகளின் எல்லைகள், உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், செலன்ஸ்கி விரைவில் ஐரோப்பிய நாடு ஒன்றில் தஞ்சம் புகுவார் என்றும், அப்போது உக்ரைன் நாட்டில் ஆட்சி மாற்றம் சுலபமாகி விடும் என்பதும் ரஷ்யாவின் கணிப்பாக உள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் போரில் தலையிடப்போவதில்லை என கூறிவரும் நிலையில், கீவ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்ற எந்த அவசரமும் இல்லை என்பதும் ரஷ்யாவின் நம்பிக்கையாக இருக்கிறது. இதனால்தான், ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் நுழையாமல் வெளியிலிருந்து முற்றுகையிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதே சமயத்தில், செலன்ஸ்கி ஆதரவாளர்கள் மீது அழுத்தம் கொண்டுவர, முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் குண்டு வீச்சு நடத்தி வருகிறது ரஷ்யா.

ரஷ்யப் படைகள் உக்ரைன் நகரங்களில் நுழைந்து கைப்பற்ற முயற்சி செய்தால் ரஷ்ய தரப்பில் உயிரிழப்பு அதிகரிக்கும் என்பதும் இன்னொரு காரணம் என பாதுகாப்பு துறை வல்லுநர்கள் கருதுகிறார்கள். அதே சமயத்தில், உயிரிழப்பு அதிகரிக்காமல் இருப்பதால், உலக அரங்கில் ரஷ்ய படையெடுப்பு குறித்த விமர்சனங்கள் மேலும் கடுமையாகாமல் உள்ளன. உக்ரைன் நாட்டை கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கினால், ஆட்சி மாற்ற நோக்கம் கூட பாதிக்கப்படும் என்பதும் ரஷ்யாவின் எண்ணம்.

வெளிநாட்டவர் மற்றும் பொதுமக்கள் வெளியேற அவகாசம் அளித்த பின், ரஷ்ய படைகள் தொடர்ந்து கீவ் உள்ளிட்ட நகரங்களை தாக்கி, செலன்ஸ்கி ஆதரவாளர்களை விரட்ட முயற்சி செய்யும் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com