உக்ரைன் நாடாளுமன்ற எம்.பி. ஒருவர், ரஷ்ய படையினருக்கு எதிராக துப்பாக்கியுடன் போர்க்களத்தில் இறங்கியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. தலைநகர் கீவ், கார்கிவ், கெர்ஸான் போன்ற முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் குண்டுமழைகளை பொழிந்து வருகிறது.
ரஷ்ய ராணுவ வீரர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், உக்ரைன் ராணுவத்தின் பலம் மிகக் குறைவாக உள்ளது. இதனால் தங்கள் நாட்டு மக்களை ரஷ்ய ராணுவத்தினருடன் போரிடுமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று, ஆயிரக்கணக்கான மக்கள் துப்பாக்கி ஏந்தி ரஷ்ய படையினருடன் சண்டையிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், உக்ரைன் நாடாளுமன்றத்தில் இளம் எம்.பி.யான சியாட்டோஸ்லாவ் யுரேஷ் (26), இயந்திரத் துப்பாக்கியுடன் உக்ரைன் ராணுவத்தினருக்கு துணையாக ரஷ்ய படையினருக்கு எதிராக சண்டையிட்டு வருகிறார். இதுகுறித்து யுரேஷ் கூறுகையில், "எனது வாழ்க்கையில் இதுவரை நான் துப்பாக்கி உள்ளிட்ட எந்த ஆயுதத்தையும் கையாண்டது கிடையாது. ஆனால், உக்ரைனில் இன்று நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. எங்கள் நாட்டுக்குள் அந்நியர்கள் நுழைந்து பெண்கள், குழந்தைகள் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்களுக்கு அஞ்சி சொந்த நாட்டிலேயே பதுங்குக் குழிகளில் எங்கள் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இவற்றை எல்லாம் பார்த்த பின்னரும், ஒருவரால் எப்படி ஆயுதம் ஏந்தாமல் இருக்க முடியும். அதனால் தான், ஓரிரு நாட்களில் துப்பாக்கி சுடும் பயிற்சியை பெற்று ராணுவத்தினருடன் களத்தில் இறங்கி சண்டையிட்டு வருகிறேன். உயிர் பயம் இல்லாதவர்களை தோற்கடிப்பது கடினம் என ரஷ்யா விரைவில் உணர்ந்துவிடும்" என அவர் கூறினார்.