ரஷ்ய விமானங்கள் பறக்க தங்கள் வான்வெளியில் மேற்கத்திய நாடுகள் தடை விதிக்குமாறு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்திவரும் நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வீடியோ உரையை வெளியிட்டுள்ளார். கடந்த 5 நாட்களில் 113 ஏவுகணைகள், 56 ராக்கெட்களால் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெலாரசில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியது சர்வதேச விதிமீறல் என்று கூறிய செலன்ஸ்கி, ரஷ்யா போர்க்குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு போரில் உதவ விரும்புவோருக்காக தனது நாட்டின் எல்லைகள் திறந்திருப்பதாகவும் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.