உக்ரைன் ராணுவத்தினர் இந்தியர்களை தாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தாங்கள் யாரிடமும் நிற, இன பாகுபாடு காட்டவில்லை என்று உக்ரைன் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ளதால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாய்நாடு திரும்பி வருகின்றனர். இதனிடையே, உக்ரைன் எல்லையை தாண்ட இந்தியர்களுக்கு அந்நாட்டு ராணுவத்தினர் அனுமதி மறுப்பதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்தியர்களை உக்ரைன் ராணுவ வீரர்கள் தாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதேபோல, ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் உக்ரைன் மக்களுக்கே ராணுவத்தினர் முக்கியத்துவம் அளிப்பதாகவும், தங்களை அவர்கள் புறக்கணித்து வருவதாகவும் இந்தியர்கள் வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்திருந்தனர். இது, இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைன் அரசிடம் இந்தியத் தூதரகம் கவலை தெரிவித்தது. இந்நிலையில், உக்ரைன் ராணுவம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "உக்ரைன் ராணுவத்தினர் இந்தியர்களை தாக்குவதில்லை என்றும், யாரிடமும் நிற, இன பாகுபாடு ராணுவ வீரர்கள் காட்டவில்லை" என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, உக்ரைனிலிருந்து வெளியேறுவதற்காக 17,000 இந்தியர்கள் எல்லைப் பகுதிகளுக்கு சென்றிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.